தமிழிசை மீது அவதூறு: நாஞ்சில் சம்பத் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!
By : Thangavelu
தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் தற்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். இவரை கடந்த காலங்களில் நாஞ்சில் சம்பத் அரசியல் ரீதியாக கருத்தை தெரிவிக்காமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி வந்தார். இவர் மீது தொடரப்பட்ட வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது. அவர் மீது பெண் கொடுமை தடுப்பு சட்ட வழக்கை விசாரிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சமபத். இவர் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் மீது பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. மேலும், பெண் கொடுமை பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழும் அவதூறு சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இன்றைய நாள் அவரது மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு பதிவு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது என நாஞ்சில் சம்பத் தரப்பில் கூறப்பட்டது. இதனிடையே தமிழிசை மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நாஞ்சில் சம்பத் கொச்சையாக பேசியுள்ளார் என்று புகார் தரப்பில் கூறப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதிஷ்குமார் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார். மேலும், பெண் கொடுமை தடுப்பு சட்ட வழக்கினை பல்லாவரம் போலீசார் விசாரிக்கலாம் என்றும் மற்ற வழக்குகளையும் புகார்தார்கள் பல்லாவரம் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
Source, Image Courtesy: One India Tamil