முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, டி.டி.வி., தினகரன் புதிய கோரிக்கை.!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, டி.டி.வி., தினகரன் புதிய கோரிக்கை.!
By : Kathir Webdesk
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வற்புறுத்தியுள்ளார்.
இது பற்றி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடிய போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் மீதான குற்றக்குறிப்பாணைகளையும், வழக்குகளையும் கை விடாமல் இருப்பது சரியானது அல்ல.
இதனால் 5,000க்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி ஓய்வு, அதற்குப் பிந்தைய பலன்கள் என எதையும் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு மனிதநேயத்துடனும் மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற காரணங்களுக்காக ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறிய தமிழக அரசு போராட்டத்தை கைவிட கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.