Kathir News
Begin typing your search above and press return to search.

அப்ரூவர் ஆன அதிகாரி! முக்கிய சாட்சி சொல்லி அமைச்சர் துரைமுருகனை சிக்கவைத்த அந்த சம்பவம்...

அப்ரூவர் ஆன அதிகாரி! முக்கிய சாட்சி சொல்லி அமைச்சர் துரைமுருகனை சிக்கவைத்த அந்த சம்பவம்...
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 Nov 2023 2:49 PM GMT

மணல் விவகாரத்தில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் தரப்பால் மிரட்டப்பட்டார்களா?

கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி துவங்கிய அமலாக்கத்துறை ரெய்டு தான் தற்பொழுது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறி இருக்கிறது, தமிழ்நாட்டில் இருக்கும் மணல் குவாரிகள், மணல் சேமிப்புக் கிடங்குகள், குவாரி அதிபர்கள் வீடுகள் என 34 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினார்கள்.

பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இந்த அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை இயங்கியதில் பல தகவல்கள் வெளி வந்தன. அதாவது குறிப்பாக தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகபட்சமாக மணல் சுரண்டப்படுகிறது, சுரண்டப்பட்டு விற்கப்படும் மணல் அனைத்தும் அரசுக்கு கணக்கிற்கு வருவதில்லை, இதை சில மாபியாக்கள் தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கின்றன. இதில் அனைத்து தரப்பில் இருந்தும் மிகப்பெரிய மாஃபியா செயல்படுகிறது.

இது ஆளும் தரப்பு வரைக்கும் செல்கிறது என அப்போதே பல விமர்சனங்கள் எழுந்தன, அப்பொழுது அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 12 கோடி ரூபாய் ரொக்கம், தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிரடியாக சம்மன் அனுப்பியிருந்தது. சம்மன் அனுப்பியது மட்டுமல்லாமல் அமலாக்கத்துறை எவ்வளவு மணல் முறைகேடாக சுரண்டப்பட்டு இருக்கிறது? எவ்வளவு மணல் கணக்கில் வராமல் மறைக்கப்பட்டிருக்கிறது? என்பதை கண்டறிய செயற்கைக்கோள் உதவியுடன் புகைப்படங்களை எடுக்க ஐஐடி நிபுணர் குழுவை நாடியது.

ஐஐடி நிபுணர் குழுவும், அமலாக்கத்துறையும் இறங்கி சோதனை நடத்தியதில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஐஐடி மற்றும் அமலாக்கத்துறை இணைந்து நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் அளவிற்கு மணல் தமிழகத்தில் இருந்து சுரண்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, இது மட்டும் அல்லாமல் மறுபுறம் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து வரம்பு மீறி சோதனை நடத்தி வருவதாகவும், மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் விதமாக மத்திய அரசின் கைப்பாவையாக உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வாதம் முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் இந்த வழக்குகளை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் ஆட்சேபனை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் அமலாக்கத்துறை பல அதிரடி உண்மைகளை கூறியுள்ளது.

அதாவது சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நேரில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர், நீர்வளத் துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் யார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் அது தங்களது தவறுதான் என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மேலும் உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்படுவது தவிர வேறு வழியில்லை என்பதால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும் வேறு அமலாக்கத்துறை வசம் அதிகாரிகள் கூறியதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அமலாக்கத்துறை கூறியுள்ளது.

அதாவது விசாரணைக்கு ஆஜரான நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டாம் என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி என்பவர் நிர்பந்தம் செய்து இருக்கிறார், அதை மீறி நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்வேன் என அதிகாரி விசாரணைக்கு ஆஜரானதாகவும் அவர் உட்பட மற்ற அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களது பெயரை வெளியிட விரும்பவில்லை எனவும் தெரிவித்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இப்படி அமைச்சர் துரைமுருகன் நேரடி உதவியாளர் உமாபதி என்பவர் அதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்லக்கூடாது என மிரட்டிய விவகாரம் தான் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, ஏற்கனவே தமிழகத்தில் 4000 கோடி ரூபாய் அளவிற்கு மணல் சட்டவிரோதமாக சுரண்டப்பட்டு இருக்கிறது என்ற தகவல் வந்தாலும் இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்ய முற்படும்பொழுது அதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு செல்லக்கூடாது விசாரணைக்கு என துரைமுருகனின் உதவியாளர் மிரட்டியதாகவும் அமலாக்கத்துறை கூறியது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பியுள்ளது.

இவ்வளவும் நடந்தும் அமலாக்கத்துறை அடுத்து என்ன செய்யும்? அமைச்சர் துரைமுருகனை கைது செய்யும் அளவிற்கு செல்லுமா அமலாக்கத்துறை என்ற அரசியல் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News