நீர் தர மறுக்கும் கர்நாடகா! பஞ்சத்திற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் சரியில்லாத திட்டமிடுதலே காரணம் - அண்ணாமலை குற்றச்சாட்டு!
By : Sushmitha
பெங்களூருவில் தற்போது கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் கார் கழுவுதல் போன்ற தண்ணீரை வீணாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விதித்துள்ளது.
மேலும் நம் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் பல இடங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் தற்போது தமிழகத்தை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது இனி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட போவதில்லை என்று கூறியுள்ளார்.
இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவையும் காங்கிரசையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பெங்களூர் நகரத்தின் தண்ணீர்ப் பஞ்சத்திற்குக் காரணம், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு சரியான திட்டமிடல் இன்றி இருந்தது தான். கர்நாடக மாநில பாஜக ஆட்சியில், இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட, இது போன்ற தண்ணீர்ப் பஞ்சம் என்ற செய்தி வந்ததில்லை என்பதில் இருந்து, காங்கிரஸ் அரசின் திறனின்மை விளங்கும்.
இதனைக் காரணம் காட்டி, தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்காமல் காங்கிரஸ் அரசு மறுப்பதை, தனது இந்தி கூட்டணி நலனுக்காக, திருடனுக்குத் தேள் கொட்டியது போல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது திமுக.
இந்தி கூட்டணி நலனுக்காக, திமுக, தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்திற்குச் சேர வேண்டிய தண்ணீரை வழங்க, கர்நாடக காங்கிரஸ் அரசை திமுக அரசு வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Source : Asianet news தமிழ்