பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலினின் சான்றிதழ் அவசியமற்றது அர்த்தமில்லாதது..! அண்ணாமலை கண்டனம்!
By : Sushmitha
நேற்றைய தினம் தமிழக பாஜக நிர்வாகிகள் மத்தியில் நமோ செயலி மூலம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி என் தாய்மொழி தமிழாக இல்லை என்பது எனக்கு பெரும் வருத்தத்தை கொடுக்கிறது என்று கூறியிருந்தார். அதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சனம் அளிக்கும் வகையில் மொழி அரசியல் என்று பேச முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜக மாநில தலைவரும் கோவை மாவட்ட மக்களவை வேட்பாளருமான அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், வழக்கம்போல, எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், தேர்தல் நடைபெறும் நேரங்களிலும் மட்டுமே திமுகவினருக்கு வரும் தமிழ் உணர்வு, தற்போது பாராளுமன்றத் தேர்தல் நேரத்திலும் வந்திருப்பது ஆச்சரியமில்லை.
கடந்த 70 ஆண்டுகளாக, தமிழ் மொழியை வியாபாரமாக்கித் தமிழகத்தைச் சுரண்டிக் கொழுத்த திமுகவின் தமிழுணர்வு நாடகத்தை, தமிழக மக்கள் இனியும் நம்புவார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நினைப்பாரேயானால், அவருக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைக்கும்.
தமது தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என்றும், தமிழ் மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்தும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்ததை, முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கேலி செய்திருக்கிறார். நமது பிரதமர் திரு. மோடி அவர்கள், இன்று, நேற்று இதனைக் கூறவில்லை. திமுகவினரைப் போல, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களைப் போல, திரு. ஸ்டாலின் அவர்களைப் போல, மொழியை வைத்து நடத்தும் வியாபார அரசியலைச் செய்ய வேண்டிய அவசியம், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு இல்லை. அவர் இந்தியாவின் பிற மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், தமிழ் மொழி தான் தொன்மையான, இனிமையான மொழி என்று பெருமையுடன் கூறி வருகிறார்.
பல ஆண்டுகளாக, இந்தியாவின் பல மாநிலங்களில் பேசும்போதும், உலக அரங்கில் பல நாடுகளில் பேசும்போதும், பல மொழிகள் பேசுபவர்கள் மத்தியிலும், ஏன், ஐநா சபையில் பேசும்போது கூட, உலகின் தொன்மையான மொழியான தமிழ், என் நாட்டின் மொழி என்று பெருமையுடனேயே கூறியிருக்கிறார். தமிழ் மொழியின் பெருமையை, தமிழகத்தின் பெருமையை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறார். உலக நாடுகளின் தலைவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து, தமிழகத்தின் தொன்மையான கலாச்சாரத்தை பறைசாற்றியிருக்கிறார். எனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மீது கொண்டுள்ள பற்றுக்கும், தமிழகத்தின் மீது கொண்டுள்ள அன்புக்கும், முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களின் சான்றிதழ் அவசியமில்லாதது. அர்த்தமற்றது என்று பதிவிட்டுள்ளார்.
Source : Dinamalar