Kathir News
Begin typing your search above and press return to search.

சொந்த நிதியில் காவிரி தூய்மைப்படுத்தும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும் - அன்புமணி கோரிக்கை

சொந்த நிதியில் காவிரி தூய்மைப்படுத்தும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும் - அன்புமணி கோரிக்கை

SushmithaBy : Sushmitha

  |  9 Jun 2024 5:07 PM GMT

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது, தாமதமின்றி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றில் இருந்து காவிரியில் பெருமளவில் கழிவுகள் கலக்கவிடப்படுகின்றன. மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து மட்டும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் உள்ளிட்ட 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. பொதுமக்கள் புனித நீராடும் கும்பகோணத்தில் மட்டும் 52 வகை நச்சுப்பொருட்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த அளவுக்கு பாழ்பட்டு போன காவிரியை தூய்மைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

காவிரியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ’காவிரியைக் காப்போம்' என்ற தலைப்பில் கடந்த, 2017-ம் ஆண்டு ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டேன். புனித நதியாக போற்றப்படும் காவிரி, நச்சு நதியாக மாறி வருவதை நாம் தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மொத்தம் ரூ.11,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மத்திய அரசிடமிருந்து மானியமாகவும், இன்னொரு பகுதியை தமிழக அரசின் பங்களிப்பாகவும் கொண்டும், தவிர மீதமுள்ள தொகையை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் நிதிக்காக காத்திருக்காமல் தமிழக அரசு அதன் சொந்த நிதியில் காவிரியை தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News