போதைப் பழக்கம் குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கூறியது திமுக அரசை மறைமுகமாக சாடுகிறதா?
By : Sushmitha
கடந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தில் அதிக அளவில் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தையும் ஏற்படுத்தியது போதைப்பொருள் விவகாரம். குறிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டே இருந்த சமயத்தில் தமிழகத்தில் போதை கலாச்சாரமானது ஊடுருவி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சொல்லும் மாணவ, மாணவிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் ஆங்காங்கே முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்திய போதைப் பொருள் கடத்தல் தலைவன் திமுக பிரமுகரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தற்போது அமலாக்க துறையும் ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளது.
முன்னதாக ஜாபர் சாதிக்கின் கைதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் பல வகையான கஞ்சா பொருள்கள், போதை பொருட்கள் சோதனையில் சிக்கியது. மேலும் சென்னையில் 56 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருள்களை மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு மட்டும் ரூபாய் 280 கோடி. அதுமட்டுமின்றி சென்னையில் 1.8 கிலோ கொக்கைன் மற்றும் 1.4 கிலோ எம்டிஎம்ஏ போதை பொருட்களையும் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது மட்டுமின்றி வலி நிவாரணிகளை கூட போதை பொருள்களாக பயன்படுத்திய செய்திகளும் வெளியானது. மேலும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சம்பவமும் திமுகவின் ஆட்சியில் தான் நடைபெற்றது. விழுப்புரத்தில் அச்சம்பவம் நடைபெற்ற அடுத்து ஒரு வருடத்திற்குள்ளே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை, அதுவும் அரசு அதிகாரிகளின் உதவியுடனே விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற கள்ளச்சாராயத்தை அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கோர சம்பவமும் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகே நடைபெற்றது.
இப்படி தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு, போதைப் பொருள்களின் புழக்கமானது அதிகரித்தும், சர்வ சாதாரணமாக கடத்தப்பட்டு வந்ததும் தற்போது ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியுள்ளது. இதற்கு அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது தமிழக வெற்றி கழகமும் இணைந்துள்ளது.
அதாவது தமிழ் சினிமாவில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இரண்டாவது ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவை சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடத்தினார். அதில் நடப்பாண்டு பத்து மற்றும் பன்னிரண்டாம் பொது வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். மேலும் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசும் பொழுது, நன்றாக படியுங்கள் என்று வழக்கமாக தனது பேச்சை தொடங்கிய விஜய், படித்தவர்கள் அரசியலுக்கு வருவதில் தவறும் இல்லை என கூறியதோடு, தமிழ்நாட்டில் போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதை நினைக்கும்போதே பயமாக இருக்கிறது. போதைப் பொருள்களை கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க ஆளும் அரசு தவறிவிட்டது. அதனால் எக்காரணம் கொண்டும் போதைப் பொருள் பக்கம் செல்ல வேண்டாம் என்று கூறியதோடு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை "SAY NO TO TEMPORARY PLEASURES SAY NO TO DRUGS" என்ற உறுதிமொழியையும் ஏற்க வைத்தார்.
இதன் மூலம் விஜய் போதை பொருட்களை திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது, மாணவ, மாணவிகளை நாம் தான் சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்து இந்த உறுதிமொழியை ஏற்க வைத்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருமே விஜய் திமுகவை சாடுவதற்காகவும் திமுக ஆட்சியில் பெருகி வரும் போதைப் பொருட்களை குறிப்பிட்டு காட்டுவதற்காகவே இதனை பேசியுள்ளார் என்றும் பேசி வருகின்றனர்.