நீட் வெறுப்பு பிரசாரம்.. தமிழகத்தை சீரழிக்கும் பிரிவினைவாதம்.. முதல்வர் அறிவாரா?
By : Bharathi Latha
சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
"மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்" என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தை சீரழிக்கும் பிரிவினைவாதம்:
சட்டப்பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு சில தினங்களில் தமிழகத்தில் பிரிவினை வாதத்தை விளைவிக்கும் செயல் அரங்கேறி இருக்கிறது. அது என்னவென்றால், தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் காணப்பட்டன.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக இதுபோன்ற இந்தியாவிற்கு எதிராக வாசகங்கள் தமிழகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கப்படுவதாக நெட்டிசன்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார்கள். சாலையோர சுவர்களில் ஆங்கிலத்தில் சட்டவிரோதமாக எழுதப்பட்ட எழுத்துக்கள், "India impose NEET, Tamil Nadu Quit India" என்றும், இந்தியா ஒழிக என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் எல்.முருகன் காட்டம்:
இதன் தொடர்ச்சியாக இந்த ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, "தி.மு.க., ஆட்சியில் பிரிவினைவாத கும்பலின் செயல்பாடு அதிகரித்துள்ளது" என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறும்போது, "தமிழகத்தில் திமுக கூட்டணியினர் செய்து வரும் நீட் வெறுப்பு பிரசாரம், தேச விரோத கும்பல்களுக்கு எந்த அளவிற்கு ஊக்கமளிக்கிறது என்பதற்கு சான்றுகள் தான் இவை. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில் சாலையோர சுவர்களில் நீட் எதிர்ப்பு என்ற போர்வையில் பிரிவினைவாத, தேசவிரோத கருத்துகள் அப்பட்டமாக பரப்பப்படுகின்றன.
திமுக ஆட்சியில் தேச விரோத, பிரிவினைவாத கும்பல்களின் செயல்பாடு அதிகரித்து வருவது, பாரத தேசத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் வேதனைக்குள்ளாக்கும் செயல். இதுபோன்ற பிரிவினைவாத கும்பல்களை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழகம் பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டு விடும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசவிரோத கும்பல்களை கைது செய்ய வேண்டும்" என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Input & Image courtesy: The Commune News