Kathir News
Begin typing your search above and press return to search.

துண்டு சீட் ஸ்டாலின் என பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர் கிண்டல்: முதல்வர் ஸ்டாலின் செய்தது என்ன?

துண்டு சீட் ஸ்டாலின் என பா.ஜ.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர் கிண்டல்: முதல்வர் ஸ்டாலின் செய்தது என்ன?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 July 2024 12:04 PM GMT

மு.க.ஸ்டாலினின் துண்டு சீட்டு சம்பவங்கள்:

எதிர்க்கட்சியாக இருந்தபொழுதும் சரி, தற்போது ஆளும் கட்சியாக மாறிய பின்னரும் சரி துண்டு சீட்டு இல்லாமல் சரியாக பேசுவதற்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் தயக்கம் காட்டுவது ஏன்? என்று பல்வேறு கட்சியினர் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக கருத்துக்களை எழுப்பி இருக்கிறார்கள். அதில் ஒரு சில சம்பவங்கள் இதோ, 24-02-2021 அன்று ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விமர்சனம் செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் மு.க.ஸ்டாலின் இடம் சவால் ஒன்றை விடுத்து இருப்பார். அதில் அவர் கூறும் பொழுது, "அ.தி.மு.க ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று கூறும் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் விவாதம் நடத்தத் தயார், துண்டுச்சீட்டு இல்லாமல் பேச ஸ்டாலின் தயாரா? துண்டு சீட்டை பார்த்தும் தவறாக பேசுகிறார் ஸ்டாலின்" என அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நேரடியாக சவாலையும் விடுத்து இருப்பார்.


மற்றொரு நிகழ்வில், "மக்கள் நீதி மய்யம் எழுதி வைக்கும் காகிதங்கள் பறந்து சென்று, துண்டு சீட்டாக மாறி திமுகவிடம் சேருகிறது. இதை படித்து ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடுகிறார். எதுவும் அவர்களின் சொந்த திட்டம் இல்லை. இல்லதரசிக்கு ஊக்க தொகை திட்டம் உள்ளிட்ட 7 உறுதிமொழி உட்பட திமுகவின் அனைத்து அறிவிப்பும் காப்பி அடிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகும்" என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 2021, மார்ச் 8 அன்று குற்றம் சாட்டி இருக்கிறார். அது மட்டும் கிடையாது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் பொதுக் கூட்டங்களில் பேசும் பொழுது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துண்டு சீட்டு இல்லாமல் பேசுமாறும், மேலும் துண்டு சீட்டை பார்த்தாவது சரியாக பேசலாம்" என்பது போன்ற அறிவுரைகளையும் கொடுத்து இருப்பார். ஆக மொத்தத்தில் எல்லோரும் சில துண்டு சீட்டு வைத்துதான் பேசுவார்கள். ஆனால் துண்டு சீட்டு என்று பெயர் பெற்ற ஒரே தலைவர் ஸ்டாலின் தான். அந்த துண்டு சீட்டையும் தவறாக படிப்பது மிகவும் கொடுமை என நெட்டிசன்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கேலி செய்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் அதே மாதிரியான ஒரு சம்பவம் இரண்டு தினங்களுக்கு முன் அரங்கேறி இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் அனைத்து பயனாளிகளுக்கும் முழுமையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்கும் திட்டம் தான், 'நீங்கள் நலமா' திட்டம். பயனாளிகளைத் தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் திட்டமாக நீங்கள் நலமா? திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்திலிருந்து, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறியும் முதல்வரின் முகவரி துறையின் "நீங்கள் நலமா" என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.


அப்பொழுது வீடியோ கால் வாயிலாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி கீர்த்திகாஸ்ரீ என்ற மாணவியரிடம் பேசுவதாக நினைத்து அவருடைய தாயாரிடம் நீங்கள் என்ன வகுப்பு படிக்கிறீர்கள்? என்று முதல்வர் கேட்டிருக்கிறார். அதற்கு உடனே மாணவியின் தாயார் நான் அவருடைய அம்மா பேசுகிறேன், என் மகள் தான் கீர்த்திகாஸ்ரீ இராமநாதபுரம் மாவட்டம், அச்சங்குடி தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பா.ஜ.க மற்றும் நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க போன்ற பல்வேறு எதிர்க்கட்சி தரப்பினர் முதலமைச்சரின் இந்த ஒரு நிலைமையை கிண்டல் செய்து வருகிறார்கள். தமிழகத்தின் முதல்வராக இருந்தும் மு.க.ஸ்டாலின் அவர்கள் யாரிடம் பேசுகிறோம்? என்பது கூட தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

அம்மாவிற்கும், பொண்ணுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாமல் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருக்கிறார் முதல்வர் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகிறார்கள். அப்படி என்றால் முதல்வர் அவர்கள் துண்டு சீட்டை பார்த்து தான் பேசுகிறாரா? அப்படி எழுதிக் கொடுத்து துண்டுச்சீட்டை பார்த்து சரியாக பேசினாலும் பரவாயில்லை, அதையும் தவறாக தான் பேசுகிறார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அது மட்டும் கிடையாது, இப்படி இருக்கும் சூழ்நிலையில் இவர் எப்படி தமிழகத்தை நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியும்? என்ற பெரிய கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்புகிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News