ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவிற்கு எதிரான இயக்குநர் பா.ரஞ்சித்தின் பேரணி : மறைமுகமாக விமர்சித்த விசிக தலைவர் திருமாவளவன்
By : Sushmitha
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்றைய தினம் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. அதில் இயக்குனரான பா.ரஞ்சித் கலந்து கொண்டார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக அரசை எதிர்த்து நடக்கும் எந்த பேரணியிலும் விடுதலை சிறுத்தைகள் கலந்து கொள்ளாது என்று கூறியுள்ளார்.
அதாவது, கடந்த ஜூலை 18ஆம் தேதி பாடலாசிரியர் மற்றும் பாடகர் அறிவு உருவாக்கியுள்ள வள்ளியம்மா பேராண்டி ஆல்பம் பாடல்கள் ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ரஞ்சித், பிரச்சனைகளின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை எழுப்புகிறோம். அதனை தீர்த்து வைக்க முயலாத போது நம் முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என நான் நினைக்கிறேன். இது ஓர் எச்சரிக்கை தான், மக்கள் பிரச்சனை சரியாக வேண்டும் என்பதற்காக தான் நான் திமுகவிற்கு வாக்களித்தேன். ஆனால் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் 2026 இல் என்னுடைய முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து, திருமாவளவன் திடீர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எதிராக நடைபெறும் எந்தப் பேரணியிலும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது, சிலர் அரசியல் களத்திலே கூலியை வாங்கிக்கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கின்ற அரசியல் அறியாமையில் உளறுகிற அற்பர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் திமுகவிற்கு எதிராக நிற்கிறார்கள் என்பதைவிட விசிகவிற்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்கக் கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க கூடாது என்று பா.ரஞ்சித் தலைமையில் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்பதை கூறி பா.ரஞ்சித்தை மறைமுகமாக தாக்கி பேசினார்.
இதனை அடுத்து நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் பேரணி கூட்டத்தில் பேசிய பா.ரஞ்சித், "இது காசுக்காக கூடிய கூட்டமா? காசு கொடுத்து நம்மை யாரும் கூப்பிட்டார்களா? ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்காக கூடிய கூட்டம் இது!" என்று திருமாவளவன் வெளியிட்ட வீடியோவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். மேலும் பட்டியலின மக்களுக்கான உரிமை குறித்து பேசினால் பி டீம் என்று சொல்கிறார்கள், சமூகத்தில் நோய் இருக்கிறது என்று சொன்னால் இவன் நோயைப் பரப்புகிறான் என்று கூறுகிறார்கள்! உண்மையான குற்றவாளியை கண்டறியாவிட்டால் காவல்துறைக்கு நிர்பந்தத்தை உருவாக்குவோம் என்று திமுகவையும், காவல்துறையையும் கண்டித்து பேசினார்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூலிக்காக கொலை செய்தவர்கள் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். அதற்காக சிபிஐ விசாரணை வேண்டுமென்று திமுகவை நிர்பந்தித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார் திருமாவளவன். ஆனால் அதற்குப் பிறகு அமைதியாக இருந்த திருமாவளவன் தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து நடக்கப்படுகின்ற பேரணி திமுகவிற்கு எதிராக அதுவும் விசிகவின் தலைமையில் நடைபெறுகிறது என்ற ஒரு பேச்சு நிலவியதால் அறிவாலய தலைமை திருமாவளவனின் கண்டித்ததாகவும், அதன் காரணமாகவே இந்த பரபரப்பான வீடியோவை பேரணி நடைபெறுவதற்கு முன்பாக திருமாவளவன் வெளியிட்டு இருக்கலாம் என்று அரசியல் வட்டாரம் முழுவதும் கிசுகிசுக்கப்படுகிறது.