Kathir News
Begin typing your search above and press return to search.

திராவிட கொள்கை அடிப்படைவாதிகளை ஆட்டம் காண வைத்த திமுக அமைச்சர் ரகுபதியின் பேச்சு:

திராவிட கொள்கை அடிப்படைவாதிகளை ஆட்டம் காண வைத்த திமுக அமைச்சர் ரகுபதியின் பேச்சு:
X

SushmithaBy : Sushmitha

  |  22 July 2024 4:28 PM GMT

இந்து சமயம், இந்து சமய நம்பிக்கைகள் மற்றும் கடவுள்கள் மீது என்றுமே பற்றற்ற மற்றும் நம்பிக்கையற்ற கருத்துக்களை கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஒருவர் தற்போது இந்து சமய கடவுளான ராமரை குறித்தும், ராமரின் ஆட்சியை குறித்தும் புகழ்ந்து பேசி உள்ளார். அதாவது புதுச்சேரியில் கம்பன் கழகம் சார்பில் நடைபெற்ற கம்பன் விழாவில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது ராமாயணம் என்ற இதிகாசத்தின் முக்கிய நோக்கம், அப்படி பார்த்தால் திமுகவும் அதே நோக்கத்தை தான் கொண்டிருக்கிறது. ராமர் எந்த குலத்தில் பிறந்தார் என்று பார்க்காமல், நாம் அனைவரும் பொதுவானவர்கள் என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு, ராமரிடம் இருக்கும் நற்பண்புகளை நாம் பாராட்ட வேண்டும்.

அன்று ராமரின் ஆட்சியில் சமூக நீதி, சமத்துவம் என்பது முக்கிய நோக்கங்களாக இருந்ததைப் போன்று இன்று திமுக ஆட்சியிலும் இது நிகழ்வதால் திராவிட ஆட்சி முறையில் முன்னோடியாக ராமரை நாம் கருதலாம் என்று ராமாயணத்தையும், ராமரையும் புகழ்ந்து பாராட்டி பேசியதோடு, ராமரின் ஆட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி என்று பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரம் முழுவதும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஏனென்றால், ஒட்டுமொத்த நாடும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதற்கு கொண்டாடியது. கும்பாபிஷேக விழாவின் பொழுது அயோத்தி ராமர் கோவிலின் அழைப்பிதழ் பெற்றதையே பலரும் பெருமிதமாக கூறிவந்த பொழுது, திமுக அதனை பெரிதாக்காமல், கும்பாபிஷேக விழாவை புறக்கணித்ததோடு, மசூதியை இடித்து விட்டு தான் நீங்கள் இந்த கோவிலை கட்ட வேண்டுமா? என்ற வகையில் கேள்விகளை முன் வைத்து சமூகத்தில் அமைதியை குலைக்கும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதுமட்டுமின்றி அமைச்சர் உதயநிதி சனாதனத்தை எதிர்த்து, சனாதனத்தை வேரோடு அறுப்பேன் என்று கூறியவர். அவரை தொடர்ந்து திமுகவின் எம்.பி ஆக உள்ள ஆ.ராசா சனாதனத்தை ஹெச்.ஐ.வி நோயோடு ஒப்பிட்டதோடு, ராமர் குறித்து மிகவும் அவதூறாக பேசியவர்!

மேலும் தொடர்ச்சியாக திமுகவும் திமுக தலைமையின் ஹிந்து மத எதிர்ப்பு போன்ற செயல்களிலேயே ஈடுபட முதல்வரின் குடும்பத்தினர் மட்டும் கோவில்களுக்கு செல்வது, இந்து மத நம்பிக்கைகளை கடைபிடித்து வந்தது பெருமளவில் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் ரகுபதி ராமரை புகழ்ந்து பேசி உள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.

அது மட்டுமின்றி தமிழகத்தில் தொடர்ச்சியாக பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகமாக நடந்து வர சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிற நிலையில், சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் ஆட்சியான ராமர் ஆட்சியின் நீட்சிதான் திமுகவின் ஆட்சி என்று தற்போது திமுக அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் நெடிசன்கள் கமெண்ட்களை முன் வைத்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News