அன்று ஜாபர் சாதிக், இன்று சையது இப்ராஹிம்: போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்ந்து சிக்கும் திமுக நிர்வாகிகள்!
By : Sushmitha
சென்னை கிளாம்பாக்கம் அரசு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர்களிடம் போலீசார் மேற்கொண்ட சோதனையில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் மற்றும் சையது இப்ராஹிம் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரிய வர, அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் செங்குன்றத்தில் சோதனைகளை போலீசார் மேற்கொண்ட பொழுது, அங்கு 70 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சையது இப்ராஹிம் என்பவர் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்திகள் வெளியானதை அடுத்து திமுக இவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் போதைப்பொருட்களை கடத்தி வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனான ஜாபர் சாதிக் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரும் திமுகவின் நிர்வாகியாக இருந்தவர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். ஜாஃபர் சாதிக் சர்வதேச அளவில் போதை கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார், அவர் திமுக நிர்வாகி என்பது செய்திகளை வெளியானது அடுத்து திமுக தலைமை இவரையும் கட்சியிலிருந்து நீக்கியது. அதுமட்டுமின்றி ஜாஃபரின் சகோதரர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி, அவரும் இந்த போதை கடத்தல் வழக்கு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியான பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவரை கட்சியிலிருந்து நீக்கினார்.
முன்னதாக என்.சி.பி அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.சி.பி கண்காணிப்பை தீவிர படுத்தியது. மேலும் கடந்த 24 ஆம் தேதியன்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவரை போலீசார் சோதனை செய்ததில் அவரிடம் 5.970 கிலோ மெத்தாம்பெட்டமைன் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதோடு ரெட்ஹில்ஸ் அருகே ஒரு குடோன் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 954 கிராம் மெத்தாம்பெட்டமைன் மற்றும் 7 லட்சம் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.