Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய அரசு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசை கோபத்தில் விளாசிய அமித்ஷா..

மத்திய அரசு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசை கோபத்தில் விளாசிய அமித்ஷா..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Aug 2024 2:35 AM GMT

கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நிலைகுறித்த விவாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று நடைபெற்றது. வயநாடு துயரம் குறித்து இரு அவைகளிலும் எடுத்துரைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த இயற்கை சீற்றத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். இந்தப் பேரிடர் காலத்தில் நரேந்திர மோடி அரசு, கேரள மக்களுடனும், கேரள அரசுடனும் பாறை போல் உறுதியுடன் நிற்பதாக அவர் கூறினார். வயநாடு பகுதியில் மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு ஆகிய பணிகளில் மோடி அரசு, சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டிருப்பதாக அமித் ஷா கூறினார்.

2014-ம் ஆண்டுக்கு முன் பேரிடர் காலத்தில் மீட்பை மையப்படுத்திய அணுகுமுறை இருந்ததாகவும், 2014-ம் ஆண்டுக்குப் பின் மோடி அரசு உயிரிழப்பு இல்லாத அணுகுமுறையை நோக்கி செல்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மத்திய அரசால் அனுப்பப்பட்ட தகவலின்படி, உரிய நேரத்தில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது மாநில அரசுகளின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். இந்தப் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது என்று கூறிய அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி,தொடர்ந்து நிலைமையை கவனித்து வருவதாகவும், நடைபெற்று வரும் நிவாரண, மீட்பு நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து அறிந்து வருவதாகவும் கூறினார்.


முன்னதாக மாநிலங்களவையில் இது குறித்து நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, இந்தப் பேரிடர் ஏற்படுவதற்கு 7 நாட்கள் முன்னதாக ஜூலை 23 அன்று கேரள அரசுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை செய்ததாகவும், இதன் பின் ஜூலை 24, 25 ஆகிய தேதிகளிலும் முன்னெச்சரிக்கை செய்ததாகவும் தெரிவித்தார். மேலும் 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக கனமழை பெய்யக்கூடும் என்றும், இதனால் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஜூலை 26 அன்று கேரள அரசுக்கு தெரிவிக்கப் பட்டது என்றும் அவர் கூறினார். முன்னெச்சரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று அவர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயன்படுத்தியதன் மூலம், பல மாநில அரசுகள் உயிரிழப்பு இல்லாத அல்லது ஓரளவு உயிரிழப்பு ஏற்பட்டது பற்றி தகவல் தெரிவித்ததாக அமித் ஷா கூறினார். ஒடிசா, குஜராத் ஆகியவற்றை இதற்கு உதாரணமாக அவர் குறிப்பிட்டார். 7 நாட்களுக்கு முன்பாகவே, ஒடிசா அரசுக்கு புயல் முன்னெச்சரிக்கை செய்யப் பட்டதையடுத்து அங்கு ஒரே ஒரு உயிரிழப்பு மட்டும் ஏற்பட்டது என்றும், குஜராத் மாநிலத்திற்கு 3 நாட்களுக்கு முன்பாக முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட போது ஒரு கால்நடைக்கு கூட சேதம் ஏற்படவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

2014-ம் ஆண்டில் இருந்து மக்களின் பாதுகாப்பையும், பந்தோபஸ்தையும் உறுதி செய்ய மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடைமுறைகளுக்கு ரூ. 2,323 கோடி செலவிட்டிருப்பதாக கூறிய அவர், ஒரு வாரத்திற்கு முன்பாகவே, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தகவல் அனுப்பப்படுவதாகவும் இந்த தகவல் இணைய தளத்தில் அனைவருக்கும் கிடைப்பதாகவும் கூறினார். 2014-ல் நரேந்திர மோடி பிரதமரான பின், உலகின் அதிநவீன முன்னெச்சரிக்கை கருவிகள் இந்தியாவில் நிறுவப்பட்டதாக கூறிய அமித் ஷா, பேரிடர்களை 7 நாட்களுக்கு முன்னதாகவே, தெரிவிக்கும் திறனைக் கொண்டுள்ள 4-5 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்றார். பெரும்பாலான நாடுகளுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக எச்சரிக்கை செய்யும் திறன் மட்டுமே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பேரிடரை எதிர்பார்த்து ஜூலை 23 அன்று மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புப்படையின் குழுக்களை கேரளாவுக்கு விமானத்தில் அனுப்பிவைத்ததாக அமித் ஷா கூறினார். பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வாழ்ந்த மக்களை வேறு இடத்திற்கு மாற்ற கேரள அரசு, தவறியது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார். உரிய நேரத்தில் கேரள அரசு செயல்பட்டிருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார். மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 10 சதவீத நிதியை மாநிலங்கள் தங்களின் சொந்த பொறுப்பிலிருந்தே விடுவிக்க முடியும் என்றும் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலேயே வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணங்க, 100 சதவீத நிதியை பயன்படுத்த முடியும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 9 பிரிவுகள் ஜூலை 23 அன்று அனுப்பப்பட்ட நிலையில், மேலும் 3 பிரிவுகள் நேற்று முன்தினம் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கேரள அரசுக்கும், மக்களுக்கும் துணை நிற்க வேண்டிய தருணம் இது என்று கூறிய அமித் ஷா, இக்கட்டான இந்த நேரத்தில், கேரள மக்களுடனும், அரசுடனும் பாறை போல் உறுதியாக நரேந்திர மோடி அரசு நிற்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News