Kathir News
Begin typing your search above and press return to search.

அவிநாசி அத்திக்கடவு திட்டம்.. பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..

அவிநாசி அத்திக்கடவு திட்டம்.. பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.. அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Aug 2024 2:33 PM GMT

ஈரோடு மாவட்டம் சோளிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் நீரேற்று நிலையத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பார்வையிட்டார். கொங்கு மண்டலத்தை திட்டமிட்டே அரசு புறக்கணிக்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாக அண்ணாமலை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலை அவர்கள் கூறுகையில், "அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு உட்பட்ட திருவாச்சி நீரேற்று நிலையத்தில், அத்திக்கடவு அவிநாசி திட்டப் போராட்டக்குழுவினரையும், இந்த திட்டத்தால் பயன்பெறக்கூடிய விவசாயிகளையும் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டு அறிந்தேன்.


திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் காலதாமதப்படுத்தி வருகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து, அமைச்சர்கள், ஆளுக்கொரு பணி நிறைவு சதவீதத்தைக் கூறி பொதுமக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்தத் திட்டத்திற்காகக் குழாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான நிதியையும் இதுவரையிலும் வழங்கவில்லை.


திமுக அரசு தமிழ்நாடு அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்காதது ஏன்?

உண்மையில், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. கடந்த 39 மாதங்களில், இது வரை பலமுறை திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று கூறி திசைதிருப்புவதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர, எதனால் இன்று வரை இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தவில்லை என்பதை, பொதுமக்களுக்குத் தெரிவிக்க, திமுக அரசு கடமைப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்கியிருக்க வேண்டும். பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல தமிழக அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. தமிழக அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் பணி. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், இதுவரை திமுக அரசு, தமிழ்நாடு அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்கவில்லை.

உடனடியாக, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், குழாய் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.


பா.ஜ.க சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்:

இவற்றை நிறைவேற்ற திமுக அரசு தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பாக, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அண்ணாமலை அவர்கள் கூறினார். திடீரென்று அதிரடியாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அண்ணாமலை அவர்கள் அறிவித்து இருக்கிறார். இதனால் திமுகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இது வெறும் டிரைலர் தான், மெயின் பிக்சர் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நீங்கள் பார்க்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இந்த தகவலை பகிர்ந்து வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News