போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்காமல் இழுக்கடிக்கும் தமிழக அரசு!
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை.
By : Karthiga
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த எட்டரை ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. மேலும் கடந்த 18 மாதங்களாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால பணபலனையும் வழங்கவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள் சுமார் 93,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
இது குறித்து பலமுறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தும் அகவிலைப்படி உயர்வு வழங்க 2022 செப்டம்பரில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் திமுக அரசு இதுவரை ஓய்வு பெற்றோருக்கான அகவிலைப்படி உயர்வை வழங்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அரசுத்துறைகளில் பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல் கார் பந்தயம் போன்ற அனாவசிய செலவுகளுக்கு நிதி ஒதுக்கி கொண்டிருக்கிறது.
எனவே உடனடியாக போக்குவரத்து ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை முறைப்படுத்தி நிலுவை விலைப்படி உயர்வு, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு நிலுவை, ஓய்வு கால பணப்பலன் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.