போதை பொருள் கடத்தலில் ஜாஃபர் சாதிக் சகோதரர் கைது: இது மாநிலத்தின் கௌரவ சின்னங்களா??
By : Sushmitha
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த போதை கடத்தல் மன்னனாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ச்சியாக போதைப் பொருள்கள் கடத்தல் குறித்த விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தது. இவரது கைது தமிழக அரசியலையும், தமிழ் சினிமா வட்டாரத்தையுமே பரபரப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால் ஜாபர் சாதிக் தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுகவின் முக்கிய பிரமுகராகவும், தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராகவும் பல பிரபலங்களுடன் நெருக்கம் காட்டி வந்தவர்.
இதனிடையே போதைப் பொருள்கள் கடத்தல் மட்டுமின்றி, சட்டவிரோத பண பரிமாற்றங்களிலும் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது. ஆனால் ஜாஃபர் சாதிக் அச்சமயம் ஜாமினில் வெளி வந்தார். இருப்பினும் அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கு கடந்த ஜூன் மாதத்தில் கைது செய்தது. மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கின் மனைவி மற்றும் தம்பி ஆகியோர் நேரில் ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 13) திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சகோதரரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகியமான முகமது சலீமை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் முகமது சலீம் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்த 15 நாட்கள் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தது. ஆனால் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க முதன்மை செசன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.
அதோடு அமலாக்க துறையின் மனு தொடர்பான நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட, விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார். ஒத்திவைக்கப்பட்ட விசாரணை இன்று (ஆகஸ்ட் 14) வந்த நிலையில் முகமது சலீமிற்கு காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அமலாக்கத் துறை முகமது சலீமை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, முகமது சலீம் கைது செய்யப்பட்ட பிறகு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தங்கள் கட்சி தலைமையகத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் சூடோபெட்ரின் போதைப்பொருள் கடத்தல்காரன் மற்றும் திமுக பிரமுகர் ஜாபர் சாதிக்கை என்.சி.பி அடையாளம் காணும் வரை தமிழக திமுக அரசுக்கு எதுவும் தெரியாது! சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு அதன் மூலம் லாபம் ஈட்டியதற்காக ஆகஸ்ட் 13 இல் அவரது சகோதரரும் வி.சி.க நிர்வாகியுமான முகமது சலீம் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், 70 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை கடத்தியதாக திமுக பிரமுகர் இப்ராகிம் என்.சி.பியால் கைது செய்யப்பட்டார். இவை கௌரவச் சின்னங்கள் அல்ல, அரசுக்கு அவமானம் என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.