இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.. தேதி குறித்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு..
By : Bharathi Latha
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற இடதுசாரி தீவிரவாதம் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பங்கேற்று விளக்கம் அளித்தார். கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது என்று கூறினார். வலுவான உத்தி, சமரசமற்ற அணுகுமுறையுடன் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார். 2026 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இடதுசாரி தீவிரவாத சித்தாந்தத்திற்கு பதிலாக வளர்ச்சியில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பணியாற்றி வருவதாக அமித் ஷா கூறினார். இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வன்முறையைக் கைவிட்டு, தலைமையிலான நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் சேருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அழைப்பு விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதியான தன்மை காரணமாக, 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பல மாநிலங்கள் இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து கிட்டத்தட்ட முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
2022-ஆம் ஆண்டில், 40 ஆண்டுகளில் முதல் முறையாக, இடதுசாரி வன்முறையால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 100-க்கும் கீழே குறைந்தது என்று அவர் குறிப்பிட்டார். 2022 மற்றும் 2024-ம் ஆண்டுக்கு இடையில் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். 2010-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், அதாவது 1,005 என பதிவான நிலையில், 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 138 ஆக குறைந்துள்ளது என்று அவர் கூறினார். இடதுசாரி தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு இருப்பது, நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியாகும் என்று அவர் கூறினார்.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளையும் பாதுகாப்புப் படையினர் கண்காணித்து வருவதாக அமைச்சர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில், சத்தீஸ்கரில் போக்குவரத்து இணைப்பு, சாலைக் கட்டுமானம், நிதி மேம்பாடு ஆகியவற்றில் அதிகப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் எடுத்துரைத்தார். சத்தீஸ்கர் அரசு விரைவில் நக்சல்களுக்கான புதிய சரணடைதல் கொள்கையை கொண்டு வரும் என்று அவர் கூறினார். இதனால் இளைஞர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, வளர்ச்சியின் பிரதான நீரோட்டத்தில் திறம்பட சேர முடியும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
Input & Image courtesy: News