ஊழலின் உருவமாக திகழும் காங்கிரசும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திய பா.ஜ.கவும்!
காங்கிரஸ் கட்சி ஊழலின் ஒட்டு மொத்த அரசியலாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.
By : Karthiga
ஊழல், வாரிசு அரசியல், ஜாதியவாதம் ஆகியவற்றூக்கு உத்திரவாதம் அளிக்கும் கட்சி காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை அவர் எக்ஸ் பகுதியில் வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:-
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பிற்போக்கான அரசியலை காங்கிரஸ் நடத்துகிறது. தேசத்தின் மீது உண்மையான பற்றுள்ள எவரும் காங்கிரசின் இந்த அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் என்றாலே ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் மட்டும்தான் அதிகாரத்தில் இருக்க முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் .ஹரியானாவில் ஒரு தந்தையும் மகனும் தான் அக்கட்சியில் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் நிலை மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஹரியானா, கர்நாடகத்தில் அரசு நிர்வாகத்தில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது .உறுதியான மக்கள் நலன் சார்ந்த ஆட்சி மூன்றாவது முறையாக தொடர ஹரியான மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஹரியானா ஊழல் மற்றும் வன்முறையின் பிடியில் சிக்கி இருந்தது. பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் ஹரியானா பல வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கான திட்டங்களையும் பாஜக அரசு அளித்து அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி உள்ளது.
இந்த நல்லாட்சி தொடர வேண்டுமென மக்கள் விரும்புவதை ஹரியானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது உணர்ந்து கொண்டேன் .ஹரியானா மக்கள் பாஜகவுக்கு அளிக்கும் வாக்கு மாநிலத்தின் நலன் சார்ந்தது மட்டுமல்ல இந்த தேசத்தின் நலன் சார்ந்தது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் நோக்கி வருகிறது. இதற்கு மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக ஆட்சி தேவை .காங்கிரஸ் கட்சியால் நாட்டை வலுப்படுத்த முடியாது. மக்களின் நலன் சார்ந்த செயல்பாடுகளில் இருந்து விலகி எப்பொழுதும் அந்த கட்சி குடும்ப கட்சியாக மாறிவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.