நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளால் மக்களை வஞ்சித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் தாக்கு
நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை காங்கிரஸ் வஞ்சித்து விட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
By : Karthiga
கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் அரசுகள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதை சமீபத்தில் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கமிட்டிகள் நிதி கையிருப்பை பொறுத்து வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்றும் நிதிச்சிக்கலுக்கு ஆளாகி விடக் கூடாது என்றும் அறிவுரை கூறினார்.மல்லிகார்ஜுன கார்கே கருத்துகள் அடிப்படையில் பிரதமர் மோடி நேற்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பொய்வாக்குறுதிகளை அளிப்பது எளிது அவற்றை முறையாக நிறைவேற்றுவது கடினம் என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்து விட்டது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் நிறைவேற்ற முடியாது என்று தங்களுக்கே நன்கு தெரிந்த பொய் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்து மக்களை வஞ்சித்து வருகிறது. தற்போது அவர்கள் மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிதி நிலைமையும் வளர்ச்சி பணிகளும் மோசமான நிலையில் உள்ளன. எனவே பொய் வாக்குறுதிகளை அளிக்கும் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சமீபத்தில் அரியானா மாநிலத்தில் காங்கிரஸின் பொய் வாக்குறுதிகளை நிராகரித்து நிலையான வளர்ச்சி சார்ந்த அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் வாக்கு செயல் படாத அரசுக்கும் மோசமான பொருளாதாரத்திற்கும் அளிக்கும் வாக்கு என்று நாடு முழுமைக்கும் தெரிந்து விட்டது.
காங்கிரஸ் உத்திரவாதங்கள் என்று கூறப்பட்ட பொய்கள் நிறைவேற்றப்படவில்லை.அந்த மாநில மக்களை வஞ்சகமாக ஏமாற்றி விட்டனர். இத்தகைய அரசியலால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகள், இளைஞர்கள்,விவசாயிகள்,பெண்கள் ஆகியோர்தான்.வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமின்றி ஏற்கனவே உள்ள திட்டங்களையும் நீர்த்துப் போக செய்கிறார்கள். உதாரணமாக கர்நாடகாவில் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக உட்கட்சி அரசியலிலும் கொள்ளை அடிப்பதிலும் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.மேலும் ஏற்கனவே உள்ள திட்டங்களையும் வாபஸ் பெற போகிறார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. தெலுங்கானாவில் கடன் தள்ளுபடி வாக்குறுதி நிறைவேறுவதற்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். முன்பு சதீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சில ஊக்கத்தொகை அளிப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆனால் ஐந்து ஆண்டுகள் ஆட்சிகள் செய்தும் அவற்றைத் தரவில்லை. காங்கிரஸ் எப்படி செயல்படுகிறது என்பதற்கு இதுபோன்ற எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன. வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தான் இந்திய மக்கள் விரும்புகிறார்கள். காங்கிரஸின் அதே பழைய போலி வாக்குறுதிகளை அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.