குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க: அண்ணாமலை குற்றச்சாட்டு.!

சென்னை நமது குழந்தைகளுக்கான அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்திருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 வயது அரசு பள்ளி சிறுமி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இளம் சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு பொது சுகாதாரம் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆண்டில் மட்டும் 13-19 வயதுக்குட்பட்ட 14,360 குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளனர்.
இது 2023 ஆம் ஆண்டை விட 35%அதிகம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குழந்தைகள் நல வாரியம் 10 மாவட்டங்களில் முற்றிலுமாக செயல்படவில்லை 15 மாவட்டங்களில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. பெண் குழந்தைகள் நலனுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. இவை எதையும் தமிழக பள்ளிகளில் செயல்படுத்தியதாக தெரியவில்லை. தமிழகத்தில் பல்கி பெருகி வரும் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பழக்கமும் இதற்கு காரணமாக அமைகின்றன. குழந்தைகளுக்கான அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது.
தவறு செய்தவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து, துறை ரீதியான கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நல வாரியத்துக்கான உறுப்பினர்களின் நியமிக்க வேண்டும் என்றும் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்.