டெல்லி முதல் மந்திரி பங்களா மறு சீரமைப்பு குறித்து விசாரணை-மத்திய அரசு உத்தரவு;காங்கிரஸ் வரவேற்பு!
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாக இருந்தபோது முதல் மந்திரி பங்களா மறு சீரமைப்பு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல் மந்திரியாக இருந்தபோது டெல்லி பிளாக் ஸ்டாப் சாலையில் உள்ள பங்களாவை தனது அதிகாரப்பூர்வ இல்லமாக பயன்படுத்தி வந்தார். அவர் பதவியிவில் இருந்தபோது பக்கத்தில் இருந்த இரண்டு பங்களாக்கள் இடிக்கப்பட்டு அவரது இல்லம் விரிவாக்கம் செய்யப்பட்டது .கோடிக்கணக்கில் அரசு பணம் செலவழிக்கப்பட்டது. அதனால் இந்த பங்களாவை' சீஷ் மஹால்' என்று பாஜக காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விமர்சித்து வந்தன. கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரம்வாரம் வரை அந்த பங்களாவில் கெஜ்ரிவால் குடியிருந்து வந்தார்.
இதற்கு இடையே டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. முதல் மந்திரி பங்களா மறு சீரமைப்பில் நடந்த முறைகேடுகள் குறித்து பாஜக எம்எல்ஏ விஜயேந்தர் குப்தா ஏற்கனவே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் இரண்டு புகார்கள் கொடுத்திருந்தார். மத்திய பொதுப்பணித்துறை அறிக்கை சமர்ப்பித்து இருந்தது .ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அந்த புகார்களை ஆய்வு செய்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மத்திய பொதுப்பணி துறையின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நிலங்கள் இணைப்பு பங்களாவின் உட்புற பணிகளுக்கு ஏற்பட்ட செலவுகள் ஆகியவை குறித்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பாஜக எம்எல்ஏ விஜயேந்தர் குப்தா வரவேற்பு தெரிவித்துள்ளார் .காங்கிரஸ் கட்சியும் வரவேற்பு தெரிவித்துள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவ் கூறியதாவது :-
டெல்லி முதல் மந்திரி பங்களா மறுசீரமைப்பில் நடந்த முறைகேடு பிரச்சனையை காங்கிரஸ் கட்சி தான் முதலில் எழுப்பியது. எனவே இந்த விசாரணையை வரவேற்கிறோம். யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் .முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விசாரணையை கண்டு யாரும் தப்பி ஓட கூடாது. சீஸ் மஹால் மறுசீரமைக்கப்பட்டபோது கொரோனா காலம் என்பதால் நாடு முழுவதும் பலர் ஆக்ஸிஜனோ படுக்கைகளோ கிடைக்காமல் அவதிப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.