பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்திற்கு கொடுத்த நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?-அண்ணாமலை!
பாஜகவுக்கு டப்பிங் தேவையில்லை முதல் அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தான் தேவை என்று அண்ணாமலை கூறினார்.

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட நிதி இரண்டரை மடங்கு உயர்ந்திருக்கிறது. ரூபாய் 46 ஆயிரம் கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் எந்த அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் வரவில்லை என்று கூறுகிறார். எல்லா ஆண்டுகளிலும் எல்லா மாநிலத்திற்கும் சிறப்பு திட்டம் வராது.
2021 - 2022 இல் மிகப்பெரிய அளவில் ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ஒரே ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைக்கு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த வருடம் ஆந்திராவுக்கும் இந்த வருடம் பீகாருக்கும் இது போன்ற நிதியை கொடுத்திருக்கிறார்கள் .பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு கொடுத்த நிதி குறித்து அவர்களுடைய நிதி அமைச்சரிடம் கூறி முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது? பாஜக ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பது குறித்து அவர்களுடன் மேடை போட்டு விவாதிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஏழு சதவீதம் ஓட்டுகளை திமுக இழந்து இருக்கிறது.2026 இல் 20% வாக்குகளை இழந்து கீழே வருவார்கள். முதலமைச்சருக்கு டப்பிங் செய்வதற்கு பல அமைச்சர்கள் அதுவும் அதிமுகவில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள். அதனால் டப்பிங் எங்களுக்கு தேவையில்லை.அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் தான் முதலமைச்சருக்கு டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக கட்சிக்கு எங்கும் டப்பிங் தேவைப்படுவது இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.