ஹிந்தியை திணிக்கவில்லை தேசிய கல்விக் கொள்கை பல்வேறு மொழிகள் மீதும் கவனம் செலுத்துகிறது - தர்மேந்திர பிரதான்!
தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை என்றும் திமுக எதிர்ப்பதற்கான அரசியல் காரணங்கள் நிறைய உண்டு என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை. தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தேசிய கல்விக் கொள்கை 2020-இல் ஹிந்தி மட்டுமே இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. தாய்மொழி அடிப்படையில் கல்வி அமையும் என்று கூறியுள்ளோம். தமிழகத்தை பொறுத்தவரை அது தமிழாகவே இருக்கும். சில நபர்களின் அரசியல் நோக்கங்களுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை. தேசிய கல்விக் கொள்கையானது நாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் மீதும் கவனம் செலுத்துகிறது.
அது ஹிந்தியோ, தமிழோ, ஒடியாவோ அல்லது பஞ்சாபியோ அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு. தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக சிலர் எதிர்க்கின்றனர் என்றார் தர்மேந்திர பிரதான். மும்மொழி கொள்கை தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்துவரும் நிலையில் கல்வி அமைச்சர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.