மத்திய அரசு மொழிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தெரியுமா? அமித் ஷா பதிலடி!

மத்திய அரசு தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார். சென்னை ராணிப்பேட்டையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். தொழில் பாதுகாப்பு படை அணிவகுப்பு கொடுத்த மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கூறும் போது,ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகுதான் சி.ஐ.எஸ்.எப் தேர்வு தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் எழுத முடிகிறது. மருத்துவம்,பொருளியல் உள்ளிட்ட படிப்புகளில் மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார். தமிழகத்தின் வளமான கலாச்சாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி வருகிறது.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக்க மாற்ற பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார். இந்தியாவை உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த இலக்குகளை அடைவதற்கு சி.ஐ.எஸ்.எப் பெரிதும் பங்களிக்கிறது. பிரதமர் மோடி தமிழக மக்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் மிகுந்த மதிப்பு மரியாதை வைத்துள்ளார் என அமித்ஷா பேசினார்.