திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பழனிச்சாமியின் கருத்தை வரவேற்கிறேன்- கோவையில் சீமான்!
திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை வரவேற்பதாக கோவையில் சீமான் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோமா எதிர்க்கிறோமா என்பதில் நாம் தெளிவான முடிவெடுக்க வேண்டும். கல்வி சுகமாக இருக்க வேண்டுமே தவிர சுமையாக இருக்க கூடாது. மதிப்பெண்ணை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியாக இருக்காது. கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டு சம கல்வி, சமூக உரிமை என்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.சமச்சீர் கல்வி பாடத்திட்டம் சமச்சீர் கல்வியே கிடையாது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு விழாவுக்கு நான் ஒரு பண்பாட்டு ரீதியாக குடும்ப நிகழ்வுக்கு செல்கிறேன்.
இது அரசியல் பேசுவதற்கான இடம் கிடையாது. கொள்கை மாறலாம்.மனிதம் மாறாது. எங்கிருந்தாலும் நான் தனித்து தான் நிற்பேன்.கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என கேட்கிறீர்கள்? கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என யாரையும் கேட்பதில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவுக்கு எதிரான அனைத்து வாக்குகளையும் ஒருங்கிணைப்பேன் என்று கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.