அமைச்சர் பொன்முடி பதவி நீக்கம் வெறும் கண் துடைப்பா? பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம்!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியிருக்கிறது அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு. தி.மு.க-வின் மூத்த தலைவரும், தமிழக வனத்துறை அமைச்சருமான பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் இந்து மத அடையாளங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, அவரை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்ட X பதிவில், "திமுகவின் அரசியல் பேச்சு தரம் தாழ்ந்து, இந்து மத அடித்தளங்களை தாக்குகிறது. இதை மக்கள் மறக்க மாட்டார்கள், ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வானதி சீனிவாசன், தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அறிவாலயத்தை குறிப்பிட்டு, "பொன்முடியின் பேச்சு இந்து மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் உள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
பொன்முடியின் சர்ச்சை பேச்சு: என்ன நடந்தது?
பொன்முடி, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், இந்து மதத்தில் சைவ மற்றும் வைணவ சமயங்களின் புனித அடையாளங்களை அவமதிக்கும் வகையில் ஒரு நகைச்சுவையை பகிர்ந்தார். சைவ சமயத்தின் கிடைத்திலகம் மற்றும் வைணவ சமயத்தின் செங்குத்து நாமத்தை பாலியல் சார்ந்த விஷயங்களுடன் ஒப்பிட்டு அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தி.மு.க-வின் உடனடி கண்துடைப்பு:
பொன்முடியின் பேச்சுக்கு எதிராக எழுந்த பெரும் எதிர்ப்பை அடுத்து, தி.மு.க அவசர நடவடிக்கை எடுத்தது. அவரை கட்சியின் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கியது. இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது .இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி, "பொன்முடியின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது" என கண்டனம் தெரிவித்தார். இருப்பினும், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பா.ஜ.கவின் கடும் எதிர்ப்பு:
பா.ஜ.க-வின் தமிழக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "பொன்முடி தொடர்ந்து அமைச்சராக இருப்பது வெட்கக்கேடு. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அவரை கைது செய்ய உத்தரவிட வேண்டும்" என சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
மேலும், பா.ஜ.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா, "தி.மு.க-வின் இந்து விரோத போக்கு தொடர்கிறது. உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சை தொடர்ந்து, இப்போது பொன்முடியும் இதே பாதையில் செல்கிறார்" என குற்றம் சாட்டினார். பொன்முடியை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது வெறும் கண்துடைப்பு என்று வினோஜ் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில், "இது வெறும் கண்துடைப்பு. கட்சியை விட்டு நீக்கி அவரை சிறையில் அடைக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
பொதுமக்களின் கருத்து:
பொன்முடியின் பேச்சுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாடகி, "இது ஒரு நகைச்சுவை என்று பொன்முடி கூறுகிறார். ஆனால், இது நம்மை புண்படுத்தும் ஒரு அவமானம்" என வேதனை தெரிவித்தார். சமூக வலைதளங்களில் பலரும் பொன்முடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.