Kathir News
Begin typing your search above and press return to search.

மேற்கு வங்காளத்தில் தொடரும் வக்ஃபு போராட்டங்கள்: மம்தா ஏன் அமைதியாக இருக்கிறார்?

மேற்கு வங்காளத்தில் தொடரும் வக்ஃபு போராட்டங்கள்: மம்தா ஏன் அமைதியாக இருக்கிறார்?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 April 2025 9:47 PM IST

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்டம் நிறைவேறியுள்ளது, விரைவில் நடைமுறைக்கு வரும். எனினும், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஜாங்கிப்பூர், சுதி மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் முதல் பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அதில் வன்முறை பெருமளவில் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கும்பல் பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை சூறையாடியது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதில், வன்முறை பாதித்த சாம்சர்கஞ்ச் பகுதியில் ஜாப்ராபாத் என்ற இடத்தில் வீட்டில் தந்தை மற்றும் மகன் கொல்லப்பட்டனர். வன்முறைக்கு மொத்தம் 3 பேர் பலியானார்கள். இந்நிலையில், வன்முறை தொடர்பாக முர்ஷிதாபாத்தில் 220 பேர் கைது செய்யப்பட்டனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், முர்ஷிதாபாத்தில் தந்தை மற்றும் மகன் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 2 பேரும் அடங்குவர். வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது தொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தொடரும் போராட்டம்:

வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் துலியன் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டம், வன்முறையாக மாறியதை அடுத்து, அதில் மூன்று பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்ட வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர், பல போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. போராட்டத்தை அடுத்து, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிலைமை பெருமளவில் கட்டுக்குள் இருப்பதாக காவல் துறை அறிவித்த நிலையில், திங்கள்கிழமை இந்தப் போராட்டம் வெடித்தது.

இதனிடையே, “மேற்கு வங்கம் பற்றி எரிகிறது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியோ அமைதியாக இருக்கிறார்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News