ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல: மத்திய அமைச்சர் கூறிய முக்கிய விஷயம்!

ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல எனவும், இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளம் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிரம்மோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தின் தொடக்க விழாவில் காணொலி மூலம் அவர் உரையாற்றினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என அவர் குறிப்பிட்டார்.
உரி சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்கள், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வான்வழித் தாக்குதல்கள், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இப்போதைய தாக்குதல்கள் போன்றவற்றை அவர் சுட்டிக் காட்டினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்திய மண்ணில் நடத்தப்பட்டால் இந்தியா என்ன செய்யும் என்பதை உலகம் இவற்றின் மூலம் கண்டிருக்கிறது என்று அவர் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையைப் பின்பற்றி, இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார் என்று அமைச்சர் கூறினார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது என்றும், அப்பாவி பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை என்றும் திரு ராஜ்நாத் சிங் மீண்டும் தெளிவுபடுத்தினார். ஆனால், பாகிஸ்தான் இந்தியாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து கோயில்கள், குருத்வாராக்கள், தேவாலயங்களைத் தாக்க முயன்றதாக அவர் கூறினார். நமது ஆயுதப்படைகள் வீரத்தையும் நிதானத்தையும் வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரமோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையம் குறித்து, அமைச்சர் கூறுகையில், இது இந்தியாவின் பாதுகாப்பில் தற்சார்பை நோக்கிய முயற்சிகளை வலுப்படுத்தும் என்றார். குறிப்பிடத்தக்க அளவில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.