கலைஞர் கனவு இல்ல திட்டம்: பணம் கேட்டதால் தி.மு.க தொண்டனின் ஆதங்க வீடியோ!

By : Bharathi Latha
குடிசை வீட்டில் வாழும் தி.மு.க., தொண்டனுக்கே வீடு இல்லை என ஆதங்கத்தில் வெளியிட்ட வீடியோ ரிஷிவந்தியம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025- 26 ஆம் நிதி ஆண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டம் மூலம் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று திமுக தலைமையிலான தமிழக அரசு சட்டசபையில் அறிவித்து இருந்தது. இதை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தற்போது இதற்கான பயனாளிகள் தேர்வு விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் என்னும் தி.மு.க. தொண்டர். இவர், தனக்கு வீடு கிடைக்காத ஆதங்கத்தை வீடியோ மூலம் வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக அவர் வீடியோவில் கூறும் பொழுது நான் திமுகவில் இருக்கிறேன் ஆனால் எனக்கே வீடு தர மறுக்கிறார்கள் தேர்தல் வந்தால் திமுக வேட்பாளர்களுக்கு ஓட்டு இரண்டாவது பட்டனில் போடு என்று ஓட்டு போடுவதற்கு பிரச்சாரம் செய்து ஜெயிக்க வைத்தால் என்னிடமே 30 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார்கள் எப்படி இது? என்ன நியாயம் என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக இவர் பதிவிட்டுள்ள வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக நெட்டிசன்கள் திமுக தொண்டனுக்கு இந்த ஒரு நிலைமை என்றால் அனைத்து இடங்களிலும் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு இந்த உதவி திட்டம் எப்படி போய் சேரும்? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.
