கிறிஸ்துவ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிய மாநாடு: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு!

By : Bharathi Latha
MBC பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கிறிஸ்துவ வன்னியர்களுக்கு திண்டுக்கல்லில் நடத்த உள்ள மாநாட்டுக்கு அனுமதி அளித்தால், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும் போது, "கிறிஸ்துவ மதம் சார்ந்த வன்னியர்களுக்கு MBC பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் வருகிற 24ம் தேதி மேட்டுப்பட்டியில், மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ மதத்தில் ஜாதி இல்லை எனக் கூறி மதமாற்றம் செய்தபின், தங்களை வன்னியர்கள் என அழைத்துக் கொள்வது மோசடியாகும். சட்டப்படி குற்றமாகும். இந்து சமயம் சார்ந்தவரே, வன்னியராக வாழ முடியும். கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டால், அவர் கிறிஸ்துவராகத்தான் வாழ முடியும், வன்னியராக வாழ முடியாது. ஹிந்து வன்னியர் அமைப்புகள் போராடி, MBC பிரிவில் இடம்பெற்று, அதன் வழியே கிடைக்கும் இட ஒதுக்கீட்டு உரிமைகளை, சலுகைகளை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களை, இப்பட்டியலில் சேர்த்தால், வன்னியர்கள் பாதிக்கப்படுவர். வாய்ப்புகளை, கிறிஸ்துவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வர். இதை கிறிஸ்துவ பாதிரியார்களே முன்னெடுப்பது, அப்பாவி கிறிஸ்துவ மக்களை துாண்டி விட்டு, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகும். கிறிஸ்துவத்தில் ஜாதி இல்லை என சொல்லிவிட்டு, இரட்டை வேடம் போடுவது என்ன காரணத்திற்காக?
திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியில், கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்படும், வன்னிய சமூக மக்களுக்கு எதிரான மாநாட்டை தடை செய்ய வேண்டும். இந்த மாநாடு நடத்தப்பட்டால், ஜனநாயக வழியில், சட்டத்திற்கு உட்பட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். முதல்வர் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, வன்னிய சமூக மக்களுக்கான, MBC இட ஒதுக்கீட்டு உரிமைகளை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.
