புலி வருது,புலி வருது கதை தான்:நயினார் நாகேந்திரன் கேள்வி!

பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக்கில் எப்படி வருமானம் ஈட்டலாம் என்பதை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் திமுக அரசு தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தராமல் பல கோடிக்கணக்கான முதலீடுகளையும் பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளது
சமீபத்தில் கூட தமிழகத்திற்கு வர வேண்டிய ஃபாக்ஸ்கான் எச்சிஎல் நிறுவனங்களின் சுமார் ரூ3,700 கோடி மதிப்பிலான முதலீடுகளும் உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு கைமாறி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த ஏமாற்றமளிப்பதோடு ஆளும் அறிவாலய அரசின் நிர்வாக லட்சணம் என்ன என்பதையும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
ஆனால் கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் நெய்க்கு அலையும் கதையாக தமிழகத்திற்கு தானாகக் கிடைக்கும் முதலீடுகளைத் தக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களோ முதலீடுகளை ஈர்க்கிறேன் என்ற பெயரில் வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று மக்கள் பணத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்
புலி வருது புலி வருது என்ற கதையாக திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நான்காண்டுகளில் தமிழகத்திற்கு கிடைத்த முதலீடுகள் எல்லாம் வெறும் வாய் வார்த்தைகளில் மட்டுமே அது குறித்த வெள்ளையறிக்கையை வெளியிடச் சொன்னாலோ அல்லது ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் ஐந்தாண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற திமுக-வின் தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று எனக் கேள்வி கேட்டாலோ முதல்வரிடம் பதிலில்லை
இவ்வாறு அபார ஆற்றலும் அசாத்திய திறமைகளையும் கொண்ட நமது தமிழக இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளையும் வளமான எதிர்காலத்தையும் அமைத்துத் தராமல் தங்கள் மோசடிகளை மூடி மறைப்பதிலேயே முழுக் கவனம் செலுத்திவரும் தமிழக முதல்வரும் அவரது அமைச்சர்களும் அரசுப் பதவி வகிக்க துளியும் தகுதியற்றவர்கள் நமது இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தொடர்ந்து தகர்த்து வரும் இந்த ஊழல் ஆட்சிக்கு வரும் 2026-இல் முடிவு கட்டப்படும்