திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கல்விக்கு கிடைக்காதா:நயினார் நாகேந்திரன்!

அப்பா பல்கலை வேந்தர் என தினந்தோறும் புதிய பட்டங்களைப் பெறும் ஆசையில் கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து புதுப்புது விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாடியுள்ளார்
மேலும் தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை போதிய வகுப்பறை வசதியின்மை மாணவர்களே கழிவறையைக் கழுவும் நிலை பெயர்ந்து விழும் பள்ளிக்கூரைகள் எனப் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வரும் வேளையில் தற்போது அரசுப் பள்ளிகளில் 20,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது
இது போதாதென்று 7,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பற்றாக்குறை 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படாதது துணை வேந்தர் நியமனத்தில் இழுபறி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை வினாத்தாள் கசிவு பல்கலையில் மதப்பிரச்சாரம் என உயர்க்கல்வித்துறையும் சீரழிந்து வருவது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கிளப்புகிறது
ஒரு காலத்தில் ஆன்றோர்களால் கல்வியிற் சிறந்த தமிழ்நாடு எனப் போற்றப்பட்ட மாநிலம் தற்போது புகார்களின் கூடாரமாகி படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகள் என அனைவரின் எதிர்காலத்தையும் ஒரு சேர அழித்து கல்வியிற் சீரழிந்த தமிழ்நாடாக திராவிட மாடல் அரசு உருமாற்றி வருவது மிகவும் கொடுமையானது
ஆனால் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாது அப்பா பல்கலை வேந்தர் என தினந்தோறும் புதிய பட்டங்களைப் பெறும் ஆசையில் கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து புதுப்புது விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19,260 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என்பதே உண்மை
நூற்றுக்கு நூறு சதவிகிதம் எல்லா நன்மையும் முன்னேற்றமும் தனது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என காட்டும் அக்கறையை நம் தமிழக மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கவும் பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கும் காட்ட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்