இராமேஸ்வரம் கோவிலில் கட்டண தரிசன முறை அமல்: பா.ஜ.க மாநில தலைவர் கண்டனம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் இலவச தரிசனத்திற்கு பதிலாக தற்பொழுது அங்கு இருக்கும் உள்ளூர் மக்களுக்கு தரிசன கட்டணம் விதிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும் பொழுது, "உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ளூர் பக்தர்களுக்கே தரிசனக் கட்டணம் விதிக்கப்பட்ட கொடூரத்திற்கு மத்தியில், அதனை எதிர்த்து போராடிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடவுளை தரிசிக்க வந்த சன்னியாசியிடம் படகு சேவைக்கு கட்டணம் வசூலித்த சொந்த மருமகனை சிரச்சேதம் செய்த மன்னர் விஜயரகுநாத சேதுபதி வாழ்ந்த மண்ணில், இப்படி ஒரு அவலம் நேர வேண்டுமா?
சில நாட்களுக்கு முன் "கோவிலுக்கு செல்வது நாகரீக சமுதாயத்தின் வெளிப்பாடு இல்லை" என திமுக அமைச்சர் ஒருவர் உரைத்த நிலையில் தற்போது, வெகு ஜன பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.
உள்ளூர்வாசிகளுக்குக் கட்டணம் விதித்து பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதைத் தடுக்கும் எண்ணமா? அல்லது உண்டியல் பணத்துடன், மேலும் லாபம் பார்க்கும் எண்ணமா என்று மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகமும் தவிர்க்க முடியாதது. இதன் உள்நோக்கம் எதுவாயினும் உள்ளுர் பக்தர்களுக்குக் கட்டணம் விதிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஆண்டாண்டுகாலமாக உள்ளுர்வாசிகளுக்கென வழக்கத்தில் இருந்த தரிசன முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களை வலியுறுத்துகிறேன்" என கூறினார்.