அலட்சிய மாடல் அரசால் பலியான அப்பாவி மாணவர்கள்:ரயில்வே புகாருக்கு முதல்வர் பதில் என்ன?

By : Sushmitha
கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்ற வகையில் ரயில்வேத்துறை முன்வைத்து குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வலியுறுத்தியுள்ளார்
மேலும் அவர்,கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் செம்மங்குப்பம் கிராமத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது, விழுப்புரம்-மயிலாடுதுறை பேசஞ்சர் ரயில் மோதியதில் மூன்று அப்பாவி பள்ளிக் குழந்தைகள் இறந்து போனது ஆழ்ந்த துயரத்தையும் கடும் வலியையும் ஏற்படுத்துகிறது
ஜூலை 8-ஆம் தேதி காலை 7.45 மணிக்கு இந்த துயரக் கொடூரம் நடந்துள்ளது. இந்த அசம்பாவிதத்தில் வேனில் இருந்த ஒரு மாணவரும் வேன் ஓட்டுனரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் காலை 7.40 மணிக்கு பேசஞ்சர் ரயில் வரும் என்பதை அறிந்த அந்த கேட் கீப்பர் கேட்டை மூட முயன்றதாகவும் அப்போது இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளி வேன் ஓட்டுனரும் ரயில் வருவதற்குள் கடந்து விடுகிறோம் திறந்து விடுங்கள் என கேட் கீப்பரை வற்புறுத்தியதாகவும் மறுக்க முடியாமல் கேட் கீப்பர்,கேட்டை திறந்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன
கேட் கீப்பரின் இந்த குற்றத்திற்கு அவர் மீது தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.அதே நேரம் காலை நேரம் அதுவும் ரயில் வருகிற நேரத்தில் சில நிமிடங்கள் கூட காத்திருக்க முடியாமல் ரயில்வே கேட்டை திறக்கச் சொல்லி வற்புறுத்தும் அளவுக்கு நமது மக்களிடம் பொறுமையின்மை அதிகரித்து விட்டதோ என்ற கவலையும் இந்த சம்பவத்தை ஒட்டி எழுகிறது பொது மக்களின் உளவியலில் ஏற்பட்டுள்ள அவசரத் தன்மைதான் பல அபாயங்களுக்கு வித்திடுகிறது
தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட செய்தியில் இன்னொரு முக்கியமான விவகாரத்தை சுட்டிக்காட்டி உள்ளது.அதாவது இந்த விபத்து நடந்த இடத்தில் அண்டர் பாஸ் எனப்படும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்து அதற்கான முழு நிதியையும் தானே தருவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டது. ஆனால், கடலூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஒரு வருடமாக இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்று தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் எம்.செந்தமிழ்செல்வன் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்
அதன்படி பார்த்தால் இந்த கொடூரத்திற்கு முழுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்றாகிறது உங்களுடன் ஸ்டாலின் எங்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக இந்த சுரங்கப்பாதைக்கு மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளிக்காதது தெரியாதா?இந்த ஒரு வருடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு எத்தனை முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வந்திருக்கிறார்?கடலூர் மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன் ஆகியோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் கடலூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் என்ன செய்து கொண்டிருக்கிறார்
மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்திருந்தால், அந்த இடத்தில் சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்கும். பச்சிளம் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். மாவட்டம் நிர்வாகத்தை முடுக்கி விட வேண்டிய, இந்த கொடூரம் நடந்த பகுதியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என்ன செய்து கொண்டிருந்தார்?எல்லா வகையிலும் கடமை தவறி விட்டார்கள்.இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின்,மக்களிடம் காரணத்தோடு விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்
