இந்திய பொருளாதாரத்தைத் தவறாக எடைபோடுவது ஏன்? ராகுல் காந்தியிடம் தமிழக பா.ஜ.க தலைவர் கேள்வி?

By : Bharathi Latha
தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு அவமதிப்பதாக கூறி இந்தியாவை தவறாக சித்தரித்து பேசியதற்காக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறும் போது, "மத்திய அரசை அவமதிப்பதாக எண்ணிக் கொண்டு, 'இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது' என்னும் அவதூறு கருத்தை நாடாளுமன்ற வளாகத்திலேயே சிறிதும் கூச்சமில்லாமல் உரைத்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள். துளியும் தேசப்பற்று இன்றி வெளிநாடுகளில் மலினமான கருத்துகளை வெளியிட்டு பாரதத் தாய்த்திருநாட்டை அவமதிப்பது ராகுல் காந்தியின் வழக்கம் என்பது தெரிந்ததே. எனினும், உலகின் நான்காவது பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது என்னும் அடிப்படை உண்மையைக்கூட மறந்து விட்டு, வெளிநாட்டுத் தலைவர் ஒருவரின் கருத்தை வழிமொழிந்து அற்ப அரசியலில் ஈடுபடுவது முறை தானா என்பதை ஒருமுறையாவது சிந்திக்க வேண்டும்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான திரு. சசிதரூர், திரு. ராஜிவ் சுக்லா, திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களைப் போன்ற காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களே அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்னும் உண்மையைத் தெளிவாக எடுத்துரைக்கையில், திரு. ராகுல் காந்தி மட்டும் இந்திய பொருளாதாரத்தைத் தவறாக எடைபோடுவது ஏன்? அவரது கருத்து மக்களைக் குழப்புவதற்காகக் கூறப்பட்ட ஒரு போலி விமர்சனமா? அல்லது, பாரதத்தின் வளர்ச்சியின் மீதுள்ள வயிற்றெரிச்சலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் எதுவாயினும், தாய்த்திருநாட்டையும் அதன் வளர்ச்சியையும் இழிவு செய்யும் போலியான மடமைக் கருத்துகளைக் கூறுவது ஒரு அரசியல் தலைவருக்கு அழகல்ல என்பதை ராகுல் காந்தி அவர்கள் இனியாவது உணர வேண்டும்" என கூறி உள்ளார்.
