சசிகலாவுக்கு ‘நோ’! டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சசிகலாவுக்கு ‘நோ’! டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
By : Kathir Webdesk
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்பது 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஜனவரி 27ம் தேதி சசிகலா கர்நாடக சிறையில் இருந்து வெளியில் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்துள்ள பதிலில், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வது என்பது 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் புதிய திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டுவது, மற்றும் முடித்த திட்டங்களை திறந்து வைப்பதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், இலங்கையில் சிறைப்பிடித்து வைத்துள்ள மீனவர்களை விடுவிக்கவும் கோரிக்கை வைத்தேன். அதனை பரிசீலிப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.