முளைக்காத நெல் விதையை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றிய தி.மு.க. அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!
கோ-51 நெல் ரக விதைகள் 12 நாட்களாகியும் முளைக்கவில்லை என வேதனையடைந்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் வேறு எங்கேயும் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, வரும் காலங்களில் விழிப்புணர்வோடு தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வற்புறுத்தியுள்ளார்.

By : Thangavelu
கோ-51 நெல் ரக விதைகள் 12 நாட்களாகியும் முளைக்கவில்லை என வேதனையடைந்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் வேறு எங்கேயும் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, வரும் காலங்களில் விழிப்புணர்வோடு தரமான நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு அம்மாவின் அரசு கடந்த ஆண்டு குறித்த நாளில், அதாவது ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து டெல்டா விவசாயிகள் வேளாண் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு பயனடைந்துள்ளனர். அது போல இந்த ஆண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்ந்த மாண்புமிகு அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள், உதவிகளை அளித்து வேளாண் பெருமக்களின் வாழ்வில் நிரந்தர ஒளி ஏற்றியது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் முறைப்படுத்தும் குழு அமைத்து, 50 ஆண்டுகால காவேரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.
2) டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவிப்பு
3) குடிமராமத்து திட்டத்தில் சுமார் 1132 கோடி ரூபாயில் சுமார் 5,586 நீர் நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. மேலும் டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிவரை கால்வாய்கள் தூர் வாரப்பட்டதால், குறித்த காலத்திற்குள் டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து பாசன பரப்புகளுக்கும் காவேரி நீர் சென்றடைந்து விவசாயிகள் பயனடைந்தனர்.
4) தானே புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், சம்பா மற்றும் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு, பயிர்க் காப்பீடு என்று கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1 கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக அளிக்கப்பட்டது.
5) சுமார் 1.06 கோடி விவசாயிகளுக்கு 10 ஆண்டுகளில் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன் வழங்கப்பட்டுள்ளது.
6) 5 ஆண்டுகளில் இரண்டுமுறை, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2016ல் சுமார் 12 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 5,318 கோடி ரூபாய் கடனும், 2021ல் சுமார் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 12,110 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
7) ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் 60 ஆண்டுகால கனவுத் திட்டமான, அத்திக்கடவு, அவினாசி திட்டம் 1652 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு, 24,468 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
8) விவசாய பம்பு செட்டுகளுக்கு இந்த ஆண்டு 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்டுகிறது.
9) நெல் ஜெயராமன் அவர்கள் பெயரில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் உருவாக்க நடவடிக்கை என, கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசு வேளாண்துறையில் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போதைய திமுக அரசின் அலட்சித்தாலும், அஜாக்கிரதையாலும், குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே வரகூரைச் சேர்ந்த விவசாயி திரு.வீரமணி தனது 9 ஏக்கர் நிலத்தில், 7 ஏக்கரில் தனியாரிடம் இருந்து ஏ.டி.36 ரக நெல் விதையை வாங்கி நாற்று தயார் செய்துள்ளதாகவும், மீதமுள்ள 2 ஏக்கருக்கு, செந்தலை வேளாண்ணை விரிவாக்க மையத்தில் இருந்து கோ 51 ரக விதை நெல்லை வாங்கி நாற்று தயார் செய்து விதைத்ததாகவும், ஏறத்தாழ விதைத்து 12 நாட்களாகியும் திமுக அரசு வழங்கி விதை நெல்கள் முளைக்கவில்லை என்று விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி திரு.வீரமணி வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை. அரசின் அலட்சியத்தால் பாதிப்படைந்துள்ள விவசாயி வீரமணிக்கு புதிய நெல் விதையை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், வீணாகிய விதை நாற்றுக்கு உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும்.
அதே போல் வேறு எங்கேனும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு, எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு தரமான விதை நெல்களை தழிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
