அரசியல் சலசலப்புக்கு இடையில் தனியார் ஓட்டலில் சந்தித்துக் கொண்ட ஓ.பிஎஸ்., இ.பி.எஸ்.!
அதிமுக கட்சி ஆலோசனையை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக நடத்தினார் என்று தமிழக ஊடகங்கள் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று சென்னையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளார்.

By : Thangavelu

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா கடந்த சில நாட்களாக தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோ கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் ஏன் வரவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், ஓ.பன்னீர்செல்வம் தனது புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார். அதனால்தான் அவர் கட்சி ஆலோசனையில் கலந்து கொள்ளமுடியவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.