Kathir News
Begin typing your search above and press return to search.

அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சா? - ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய ஓ.பி.எஸ் !

Breaking News.

அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சா? - ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய ஓ.பி.எஸ் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 Sep 2021 10:00 AM GMT

"திமுகவின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும்" என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர தி.மு.க அரசு எதிர்த்தது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது, "மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சினை என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்பது திமுகவுக்கு கைவந்த கலை. அந்த வகையில், தற்போது பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரிவரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட வேண்டுமென்றால், அவற்றை பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் வரம்புக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் அல்லது அதற்கான ஆயத்தீர்வை குறைக்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் செய்தி 25-01-2018 அன்று அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 04-04-2018 அன்று தனது ட்விட்டர் பக்கத்திலும், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களை, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

ஆனால் இந்த விவகாரத்தில் தி.மு.க சார்பில் நிதி அமைச்சர் கலந்து கொள்ளாவிட்டாலும், அவர் மத்திய நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், 'மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது என்றும், இதையும் ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும் என்றும், அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை' என தெரிவித்துள்ளார்.

முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


Source - Asianet NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News