Kathir News
Begin typing your search above and press return to search.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை மாற்ற கூடாது.. முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.!

சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையை கிண்டி, கிங் வளாகத்திற்கு மாற்றுவதாக வெளியான செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் அதனை கைவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை மாற்ற கூடாது.. முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை.!

ThangaveluBy : Thangavelu

  |  10 Jun 2021 10:58 AM GMT

சென்னை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையை கிண்டி, கிங் வளாகத்திற்கு மாற்றுவதாக வெளியான செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் அதனை கைவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: நோய் இன்னதெனக் கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன் பின் அந்நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறையை கையாண்டு, நோய் நீங்க மருத்துவம் செய்ய வேண்டும் என்ற திருவள்ளூவரின் வாக்கிற்கிணங்க, அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை அடையும் வண்ணம், ஏராளமான சுகாதாரத் திட்டங்களை, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை தீட்டி, நடைமுறைப்படுத்தியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.




தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும் தரமான உயரிய சிகிச்சையை இலவசமாக பெறும் வண்ணம் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதியுடன் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை சென்னை மாநகரின் மையப்பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கியதோடு, அங்கு ஒரு மருத்துவக் கல்லூரியையும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஏற்படுத்தினார்கள்.





மாண்புமிகு அம்மா அவர்கள் 2011ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஓமந்தூராரில் அமைந்துள்ள கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் செயல்படுத்துவதற்கு போதுமானதாக இல்லை என்பதாலும், பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால் அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த கட்டடம் இல்லை என்பதாலும், இருவேறு கட்டடங்களில் இருந்து தலைமை செயலகம் செயல்பட முடியாது என்பதாலும், சட்டமன்றம் தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து இயங்க வழிவகை செய்து விட்டு, அந்த இடத்தில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கினார்கள். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.





இதன் மூலம், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயின்று இந்த நாட்டின் சிறந்த மருத்துவர்களாக ஆகி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் இங்குள்ள பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். கரோனா காலகட்டத்தில் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வீடு திரும்பினர். இந்த மருத்துவமனை அனைவரின் ஏகோபித்த ஆதரவையும், பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.





இந்தச் சூழ்நிலையில் கிண்டியில் உள்ள ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அவர்கள் அறிவித்து அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்ததையடுத்து ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்த கட்டிடம் மீண்டும் சட்டமன்றமாகவோ அல்லது சட்டமேலமையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருடைய மனதிலும் எழுந்துள்ளது.





அதிமுகவைப் பொறுத்தவரை புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கிண்டி கிங் வளாகத்தில் உருவாக்குவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில் சிறப்பாக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து கிங் மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றப்படுவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனை உடனே கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News