பழனி தனி மாவட்டமாக உருவாக்கப்படும்: தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்.!
திமுக அமைத்துள்ள கூட்டணி சந்தப்பவாத கூட்டணி. அதிமுக தலைமையிலான கூட்டணியே வலிமையான வெற்றிக் கூட்டணி. இந்தத் தேர்தலில் திமுகவின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதி வேட்பாளர் ரவி மனோகரனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக அமைத்துள்ள கூட்டணி சந்தப்பவாத கூட்டணி. அதிமுக தலைமையிலான கூட்டணியே வலிமையான வெற்றிக் கூட்டணி. இந்தத் தேர்தலில் திமுகவின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது. தமிழர்களின் பண்டிகையான தைப்பூச திருநாளுக்கு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. பல்வேறு நலத்திட்டப்பணிகள் செய்ததும் அதிமுக அரசு மட்டும்தான்.
அதே போன்று நிலம், வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு அரசு நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். குடும்ப பெண்களின் பணிச்சுமையைக் குறைக்க வீடு தோறும் வாஷிங்மெஷின் வழங்கப்படும். மேலும், பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். கடவுளை இழிவுபடுத்தியவர்கள் தற்போது திமுகவினர் வேல் எடுத்துள்ளனர். அவர்களை யாரும் மக்கள் நம்பமாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.