பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம்: வசமாக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர்!
By : Thangavelu
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்குவதற்காக பயனாளிகளிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயலாளர் பணம் பெறுகின்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ளது அத்திமலைப்பட்டு என்ற கிராமம். அங்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 22 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ரூ.2,70,000 நிதி ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் இத்தொகை பலருக்கு வழங்கவில்லை என்ற புகார் வந்தது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விசாரணை நடத்திபோது, அத்திமலைபட்டு ஊராட்சி சார்பில் பணியை ரத்து செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஆணை வழங்குவதற்காக பயனாளிகளிடம் தலா ரூ.30,000 லஞ்சமாக அளிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் மற்றும் செயலாளர் ரமேஷ் வற்புறுத்தியுள்ளனர். அதன்படி பயனாளியிடம் ரூ.6,000 லஞ்சமாக பெற்றுள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும். இது போன்று லஞ்சம் கேட்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தஞ்சையில் ஒரு இளைஞர் தனது உயிரை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu