மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செய்துவிட்டு வாக்கு சேகரித்த பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி.!
பென்னாகரம் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி தனக்காக வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதே போன்று சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அது போன்று தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தருமபுரி சட்டமன்ற தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பென்னாகரம் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி தனக்காக வாக்கு சேகரித்து வருகிறார். அதே போன்று ஏரியூர், நாகமரை, நெரூப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதனையடுத்து சின்னம்பிள்ளையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜி.கே.மணி மற்றும் அதிமுக மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன் பிறகு சின்னம்பிள்ளை பகுதியில் தனக்காக ஜி.கே.மணி வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வின்போது பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.