பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை.. மதுரையில் அ.தி.மு.க., பா.ம.க. பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை.!
மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் பிரதமர் மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று (மார்ச் 31ம் தேதி) திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார்.
இந்நிலையில், மதுரை பாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் பிரதமர் மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுமார் 36 வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று இரவு தனி விமானத்தில் மதுரை வருகிறார். இதன் பின்னர் அவர் பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்குகிறார். நாளை காலை (ஏப்ரல் 2ம் தேதி) அங்கிருந்து காரில் புறப்பட்டு பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் 3,000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சார களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.