தாராபுரத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்.!
பிரதமர் திருப்பூர் வருகையை முன்னிட்டு பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மாநாட்டு திடலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் மிக குறைவாக உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தாராபுரத்தில் மிக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்தும் மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்காகவும் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.
இந்த பொதுக்கூட்டம் இன்று (30ம் தேதி) தாராபுரத்தில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு கோவை விமானநிலையம் வருகிறார். அதன் பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார்.
அதனை முடித்துக்கொண்டு, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் 12.40 மணிக்கு தாராபுரத்திற்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
பிரதமர் திருப்பூர் வருகையை முன்னிட்டு பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மாநாட்டு திடலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.