Kathir News
Begin typing your search above and press return to search.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு: தி.முக. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல்!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு: தி.முக. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட ஓபிஎஸ் வலியுறுத்தல்!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 Jan 2022 12:11 PM GMT

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் திமுக அரசு முறைகேடுகள் செய்திருப்பதாகவும், உடனடியாக வெள்ளை அறிக்கையை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1250 கோடி ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் திமுக அரசால் வழங்கப்பட்டன. பொங்கல் தொகுப்பில் இருந்த பெரும்பாலான மளிகைப் பொருட்கள் சாப்பிடுவதற்கே லாயக்கற்றது என்றும், இதில் உள்ள பொருட்களை சாப்பிட்ட சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது என்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. நானும் இது குறித்து விரிவாக அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இன்னும் சொல்லப்போனால், நடுநிலையாளர்கள் திமுகவிறகு ஆதரவாக பேசியவர்கள் கூட இந்த விஷயத்தில் திமுகவை விமர்சித்தனர்.


இந்தச் சூழ்நிலையில் இது குறித்து உணவுத்துறை அமைச்சர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாக கூறியிருக்கிறார். அமைச்சர் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனம் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால், உடலுக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய பொருட்களை விநியோகம் செய்தால், கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போல் உள்ளது. ஒரு நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை கொடுக்கப்படும் போது பொருட்களின் தரம், எடை ஆகியவை குறித்து அதற்கான ஒப்பந்தப் புள்ளியில் விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்தத் தரத்தையும், எடையையும் கொள்முதல் ஆணை பெற்ற நிறுவனங்கள் பின்பற்றியதா என்பதை திமுக அரசு சோதனை செய்யவில்லை என்பதும், இதற்குக் காரணம் சேர வேண்டியவர்களுக்கு சேர வேண்டியது சென்றுவிட்டது என்பதும்தான் பொதுமக்களின் குற்றச்சாட்டு.


அமைச்சர் கூறுகையில், சில இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதை மாற்றிக் கொடுத்ததோடு, அதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். இது சப்பைக்கட்டும் செயல். உண்மை நிலை என்னவென்றால், பெரும்பாலான இடங்களில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு. அமைச்சரின் பதிலைப் பார்க்கும்போதே இதில் முறைகேடு நடந்திருப்பது என்பது ஊர்ஜிதமாகிறது.


கடைசியாக திமுக ஆட்சியில் 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் 45 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் 50 கிராம் முந்திரி, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய 62 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும, அதிமுக ஆட்சியில் கிலோ பருப்பு 120 ரூபாய் 50 காசுக்கு வாங்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் 78 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாகவும், இதில் மட்டும் 74 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டதாகவும் கூறி இருக்கிறார் அமைச்சர். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மக்களுக்கு நல்ல தரமான பொருட்களை வாங்கி வழங்க வேண்டும் என்பதில் அதிமுக முனைப்பு காட்டியது என்பதும், திமுக தரமற்ற மட்டமான பொருட்களை வழங்கி மக்களை ஏமாற்ற ஆர்வம் காட்டியது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. மேலும் அதிமுக காலத்தில் வழங்கப்பட்ட பொருட்கள் குறித்து திமுக உட்பட யாரும் எவ்வித குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்பதை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.


எனவே 1250 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டது திமுகவின் பொங்கல் பரிசு. மக்களின் வரிப்பணம் ரூ.1250 கோடி வீணடிக்கப்படடுள்ளது. மேலும் எந்த நிறுவனங்களிடமிருந்து பெற்ற பொருட்கள் என்று ஒவ்வொன்றையும் முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Twiter

Image Courtesy:

Next Story
கதிர் தொகுப்பு
Trending News