தபால் ஓட்டை பையில் சேகரித்த தேர்தல் அதிகாரிகள்.. பெட்டி கொண்டு வந்தால்தான் போடுவேன் என அடம்பிடித்த மூதாட்டி.!
நீங்கள் போயிட்டு மூடி முத்திரையிடப்பட்ட பெட்டி கொண்டு வாருங்கள். அப்போதுதான நான் போடுவேன்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக வயதானவர்களுக்கு தபால் வாக்கை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. இதனிடையே தபால் வாக்கு சேகரிக்கும் பணிகளும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் வருகின்ற 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதியவர்கள் வாக்குசாவடிக்கு செல்லாமல் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்கவும் தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. தபால் வாக்குபதிவு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இவைகள் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை சேகரிக்கும் பணிகளை தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அது போன்று கோட்டயம் மாவட்டம், கொல்லம்பரம்பு பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி பவானி அம்மா என்பவர் தபால் வாக்கு அளிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி அவரது தபால் வாக்கு சீட்டை பெறுவதற்கு பவானி அம்மா வீட்டிற்கு தேர்தல் அதிகாரிகள் சென்றனர். அப்போது அந்த மூதாட்டியிடம் கட்டை பையை நீட்டி அதில் தபால் வாக்கை போடும்படி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் கட்டைப் பையை பார்த்ததும், பவானி அம்மா தபால் வாக்கை போட மறுத்துவிட்டார். இந்த பையில் வாக்கு சீட்டை போட்டா அது எப்படி பாதுகாப்பாக இருக்கும். எனவே நீங்கள் போயிட்டு மூடி முத்திரையிடப்பட்ட பெட்டி கொண்டு வாருங்கள். அப்போதுதான நான் போடுவேன்.
உங்கள் மீது நம்பிக்கை இல்லை. இது தொடர்பாக அந்த மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் சென்றது. அப்போது மாவட்ட அதிகாரி பவானி அம்மாவிடம் செல்போனில் பேசி சமாதானம் செய்து வைத்தார். இதன் பின்னரே அந்த மூதாட்டி தபால் வாக்கை பையில் போட்டார். வயதானாலும் மூதாட்டி நல்ல அறிவு சார்ந்த கேள்வியை எழுப்பியுள்ளார் என்று கேரளா முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.