ஆன்மீகத்தை விரும்பும் ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.கவிற்கே வாக்களிப்பார்கள் - ராஜேந்திர பாலாஜி!
ஆன்மீகத்தை விரும்பும் ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.கவிற்கே வாக்களிப்பார்கள் - ராஜேந்திர பாலாஜி!
By : Mohan Raj
"ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க'வுக்குத்தான் வாக்களிப்பார்கள்" என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
பழநிமலை முருகன் கோயிலுக்கு நேற்று காலை வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சாமி தரிசனத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "நடிகர் ரஜினிகாந்த் தன் உடல்நிலையை எந்தவித ஒளிவு மறைவுமின்றி தெரிவித்து, அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார்.
அவர் நீண்ட நாள்கள் நோய்நொடியின்றி இருந்து கலை உலகில் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ரஜினிகாந்த் விரும்பியது ஆன்மிக அரசியல்தான். அந்த அரசியலைத்தான் அ.தி.மு.க நடத்திவருகிறது. தி.மு.க'வில் இருப்பவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆன்மிக அரசியலை விரும்பும் ரஜினி ரசிகர்கள், அ.தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்பார்கள்" என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடுபவர்கள் அ.தி.மு.க'வினர் மட்டுமே. கூட்டணியில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அ.தி.மு.க தலைமை, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். வருகிற தேர்தலில் தி.மு.க'வுக்கு சம்மட்டி அடி கொடுத்து மக்கள் தோல்வியடையச் செய்வார்கள்” என்று பேசினார்.
இதற்கிடையில் தமிழகத்தின் பல பகுதிகளில், "தலைவா ஆன்மீக அரசியலை உங்களால் தான் கொடுக்க முடியும், மக்களுக்காக உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவும்" என எழுதப்பட்ட பதாகைகளுடன் ரஜினி ரசிகர்கள் அமைதி போராட்டத்தில் ஈடுபடுவது குறிப்பிடதக்கது.