பரபரப்பான அரசியல் சூழலில் முதலமைச்சரை சந்திக்கிறார் ராமதாஸ்.!
பரபரப்பான அரசியல் சூழலில் முதலமைச்சரை சந்திக்கிறார் ராமதாஸ்.!
By : Kathir Webdesk
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார். இதன் பின்னர் பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர் குழுவை சந்தித்து இடஒதுக்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக கூட்டணி தொடர்பாக பல கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த எம்.பி. தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக, தற்போது சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு நிபந்தனை விதித்துள்ளது. அவர்களின் முதன்மையான கோரிக்கையாக வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பிரதானமாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்தித்து பேசுகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். இந்த சந்திப்பானது சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெறுகிறது. இதில் கூட்டணி மற்றும் இடஒதுக்கீடு குறித்து விரிவாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.