Kathir News
Begin typing your search above and press return to search.

இதை தடுப்பது உங்கள் கடமை - ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஸ்டாலினுக்கு அறிவுறுத்திய ராமதாஸ் !

Breaking News.

இதை தடுப்பது உங்கள் கடமை - ஆன்லைன் சூதாட்டம் குறித்து ஸ்டாலினுக்கு அறிவுறுத்திய ராமதாஸ் !

Mohan RajBy : Mohan Raj

  |  9 Sep 2021 4:15 PM GMT

"ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றுவதே தி.மு.க அரசின் கடமை" என பா.ம.க நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதன் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ள ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சத்தை இழந்ததால்தான் அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்ற 24 வயது இளம் ஆயுதப்படை காவலர், சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 4-ம் தேதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். நல்வாய்ப்பாக துப்பாக்கி குண்டு அவரது மூளையைத் தாக்காததால் உயிர் பிழைத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுவருகிறார்.

அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ரூ.7 லட்சம் அளவுக்குக் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாகவும், அதைத் தாங்கிக்கொள்ள முடியாததால்தான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. எந்த சோகம் நடக்கக்கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகமும் நினைத்ததோ அந்த சோகம் நடந்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் என்ற ஆக்டோபஸின் கொடுங்கரங்களுக்குள் சிக்கிய வேலுச்சாமி என்ற இளம் காவலர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். அவர் விரைவில் உடல் நலம் தேற விழைகிறேன்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழும் 2-வது விரும்பத்தகாத சம்பவம் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் 20-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், சேர்ந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்ற இளம் தந்தை லட்சக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் தமது மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிக்கவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்போது காவலர் வேலுச்சாமி கொடூரமான முறையில் தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பியிருக்கிறார். இத்தகைய கொடுமைகளும் சோகங்களும் இனியும் நடக்காமல் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். அதற்கான ஒரே தீர்வு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றுவதே ஆகும்" என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News